கோவை உக்கடம் புல்லுக்காட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் அளித்த தகவலின்படி பெரிய கடைவீதி போலீசார், அந்தப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது அந்த வழியாக கட்டைப் பையுடன் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த பையில் ஒரு கிலோவிற்கு மேலாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை கைது செய்து பெரிய கடைவீதி போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த நவ்ஷாத் என்பது தெரியவந்தது.
இவர் மீது போதை பொருட்கள் விற்பனை செய்வதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. நவ்ஷாத் கோவையில் தொடர்ந்து இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. மனநிலை, மூளை நரம்புகள் வெகுவாக பாதிக்கும், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போன்ற போதைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்து வந்ததாலும், தொடர்ந்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டும், கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின்பேரில் நவ்ஷாத்தை போலீசார், காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.