கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த மணச்சனப்பட்டியைச் சேர்ந்தவர் கலாராணி. இவரது மகள் இப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கடந்த 2018ம் ஆண்டு 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தொடர்ந்து 9ம் வகுப்பு படிக்க சிறுமியை அவரின் அத்தை வீடு அமைந்துள்ள புரசம்பட்டிக்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர். அங்கிருந்து திருச்சி மேலப்புதூரிலுள்ள பள்ளியில் 9ம் வகுப்பு சேர்ந்து படித்து வந்துள்ளார். சிறுமியின் அத்தை மகனும், JCB ஆப்பரேட்டருமான சேகர், 2018ம் ஆண்டு சிறுமியின் பிறந்த நாள் அன்று பரிசுப் பொருட்கள் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி திருச்சி அழைத்துச் சென்று பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். பிறகு புரசம்பட்டிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர், சேகர் வேலைக்காக மலேசியா செல்ல இருப்பதாகச் சிறுமியிடம் கூறியுள்ளார். ஆனால், சிறுமி அங்கு வேலைக்குச் சென்று வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டால் நான் என்ன செய்வது எனக் கேட்டதற்காகக் கடந்த 02.04.2018 அன்று காலை 11 மணியளவில் சின்னப்பனையூரில் உள்ள விநாயகர் கோவிலுக்குக் கடத்திச் சென்று 13 வயதே நிரம்பிய சிறுமியை திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு, சிறுமியிடம் திருமண வயது வந்தவுடன் வீட்டில் சொல்லிக் கொள்ளலாம் எனக் கூறி கட்டிய தாலியைக் கழட்டி வாங்கி வைத்துக் கொண்டார். மலேசியா சென்றுவிட்டுக் கடந்த 2020 அன்று ஊர் திரும்பிய சேகர், சிறுமியிடம் நான் தான் உன்னைத் திருமணம் செய்து கொண்டேனே எனக் கூறி கட்டாயப்படுத்தி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு ஈரோட்டிற்கு வேலைக்காகச் செல்வதாகக் கூறி சிறுமியைக் கடந்த 10.11.2021 அன்று அவரது அம்மா வீட்டில் விட்டு விட்டுச் சென்று உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 11.11.2021 அன்று சேகர், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாகத் தகவல் சிறுமிக்கு 17.11.2021 தெரியவந்துள்ளது. அதனையடுத்து சேகர் திருமணம் செய்து கொண்டது, தன்னை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்டவற்றை தன் தாயிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக சேகர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதனை விசாரித்த நீதிபதி நசீமா பானு இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்பில், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், கடத்திக் கொண்டு போய் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தை திருமணம் செய்து கொண்டதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சம் நிவாரண நிதி அரசு வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து குற்றவாளி சேகரை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.