நாகையில் மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் டாஸ்மாக் முன்பாகவே வாலிபரை அடித்து படுகொலை செய்த விவகாரத்தில் மூன்று பேரை பிடித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுவருகிறது.
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் தாமரைக்குளம் தென்கரையைச் சேர்ந்தவர் மாரியப்பன் (25). இவர், நாகை மருந்து கொத்தள சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் மதுபானம் வாங்கினார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்களும் மதுவாங்கினர். யார் முன்னே வாங்குவது என்பதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் மாரியப்பனை மதுபானகடைக்கு அருகில் கிடந்த கல்லை எடுத்து தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். படுகாயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த நாகை நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாரியப்பனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு செய்வதற்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாஸ்மாக் கடை முன்பு மது போதையில் இரத்தக் கறைகளோடு நின்றுகொண்டிருந்த மூன்று நபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தப்பியோடியவர்களை விரைவில் பிடித்துவிடுவோம் என்கிறார்கள் போலீசார்.
மது வாங்குவதில் ஏற்பட்ட மோதலால் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.