சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று (25/05/2022) காலை 11.00 மணியளவில் இளைஞர் திறன் திருவிழாவைத் தொடங்கி வைத்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவில் முதன் முதலாகத் தொடங்கப்பட்ட கல்லூரிகளில் ராணி மேரி கல்லூரியும் ஒன்று. தமிழகத்தின் முதல் மகளிர் கல்லூரி ராணி மேரி கல்லூரி தான். ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்கு ஜெயலலிதா ஆட்சியில் நடத்தப்பட்ட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்கள் நடைபெற்றது. ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மாணவிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தேன்.
ராணி மேரி கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்தது எனக்கு பெருமை. இளைஞர்களின் வளர்ச்சியைப் பொறுத்தே ஒரு நாட்டின் வளர்ச்சி அமையும். 15 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிகம் இருக்கும் நாடு இந்தியாதான். இளைஞர்கள் வளர்ச்சிக்காக நான் முதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க ஏராளமான நிறுவனங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் இளைஞர்கள் திறனை மேம்படுத்த நான் முதல்வன் என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். என்னுடைய நேரடி கண்காணிப்பில், 'நான் முதல்வன் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திறமையான இளைஞர்களுக்கு வழிகாட்டியாக தமிழக அரசு திகழும்" எனத் தெரிவித்தார்.