விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. விடுமுறை நாளான நேற்று (24.10.2021) தாலுகா அலுவலகம் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த தாசில்தார் பயன்படுத்தும் கார், திடீரென தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. இதை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள், கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
அத்தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி ஆய்வாளர் அன்பழகன் உள்ளிட்ட போலீசார், பொதுமக்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அந்தப் பகுதியில் கண்ணாடித் துகள்கள், சுத்தியல், ஒரு வாட்டர் கேன் ஆகியவை கிடந்துள்ளன. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் தாலுகா அலுவலகத்தின் பின்பக்கம் சென்று பார்க்கும்போது, ஒரு நபர் அங்கிருந்து தப்பி ஓடுவது தெரிந்தது. அவரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
மேலும், தாலுகா அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் போலீசார் ஆய்வுசெய்தனர். அதில், அந்த நபர் தாசில்தார் கார் கண்ணாடியை சுத்தியலால் உடைப்பதும், வாட்டர் கேனில் கொண்டு வந்த வார்னிசை ஊற்றி தாசில்தார் காருக்குத் தீ வைப்பதும் பதிவாகியிருந்தது. அதேசமயம், பிடிபட்ட நபர் கண்டாச்சிபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது ரஞ்சித் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் ரஞ்சித்திடம் நடத்திய விசாரணையில், “எனக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தாசில்தார் காருக்குத் தீ வைத்து எரித்தேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், கடந்த வருடத்திற்கு முன்பு அதே தாலுக்கா அலுவலகத்தில் பதிமூன்று ஜன்னல் கண்ணாடிகளையும், தாசில்தார் கார் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியதும் அவர்தான் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரஞ்சித்தை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், ரஞ்சித் போலீசாரிடம் கூறும்போது “தாலுகா அலுவலகத்தில் அளவுக்கதிகமாக லஞ்சம் வாங்குகிறார்கள் உள்ளனர். அந்த கோபத்தில் இந்த செயலைச் செய்தேன்” என்று கூறியதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கார் எரிக்கப்பட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறுகிறார்கள்.