திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை தாயனூர் பகுதியில் உள்ள வயல் வெளியில் 19 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த இடத்துக்குச் சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில், இறந்தவர் திருச்சி பள்ளக்காடு தோகைமலை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் ஆகாஷ் என்கிற செல்லாமாரி(19) என்பது தெரியவந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் ஆகாஷ் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக தான் அகிலா(21) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். கைப்பற்றப்பட்ட ஆகாஷ் உடலில் நெற்றி, கழுத்து, உச்சந்தலையில் கத்திக்குத்து காயங்கள் உள்ளது. எனவே காதல் திருமணம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு எஸ்.பி சுஜித்குமார் சென்று போலீசார் விசாரணை குறித்து ஆய்வு நடத்தினார்.