
வேலூர் அடுத்த நஞ்சு கொண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் பிரபாகரன். இவரும் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 5 வருடமாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுத்த ராணுவ வீரர் பிரபாகரன், தனது உறவினர் பெண் ஒருவரை கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் விரக்தி அடைந்த பிரபாகரனின் காதலில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் உறவினர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காதலித்து தனது மகளை ஏமாற்றிய ராணுவ வீரர் பிரபாகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். மேலும் பெண்ணின் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.