கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்திப்பாக்கம் வனத்துறைக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் கடந்த 14ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண்மணி ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த திருக்கோவிலூர் போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு டி.எஸ்.பி கங்காதரன், இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் கொலையாளிகளைத் தீவிரமாக தேடிவந்தனர்.
அவர்களின் தீவிர விசாரணையில், எரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட மூதாட்டி அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வையாபுரி மனைவி பார்வதி (65) என்பது தெரியவந்தது. இவரை யார் கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் சந்தேகத்தின் பெயரில் நெடுங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 19வயது அருள் சகாயம், அவரது நண்பர் விஜய் (20) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், மூதாட்டி பார்வதியின் மகன் தங்கராசு கடந்த 6 மாதத்துக்கு முன்பு இறந்துவிட்டார். இந்தக் கவலையினால் பார்வதி மன அமைதிக்காக அடிக்கடி வனத்துறை காட்டில் உள்ள சடைக்கட்டி முனியப்பர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வருவது வழக்கம்.
அப்படி சென்றுவருபவரை அருள் சகாயம் தனது பைக்கில் அழைத்துச் சென்று கோயிலில் இறக்கிவிடுவாராம். இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி அருள் சகாயம் பார்வதியை சடைக்கட்டி முனியப்பர் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்படி செல்லும்போது அவரது நண்பர் விஜயையும் வரவழைத்துள்ளார். இருவரும் பாட்டியுடன் சேர்ந்து மூவருமாக புறப்பட்டுச் சென்று காட்டுப்பகுதியில் உள்ள சடைக்கட்டி முனியப்பர் கோயிலுக்குச் சென்றுள்ளனர். அப்படி செல்லும்போது அத்திப்பாக்கம் வனப்பகுதியில் மூதாட்டி பார்வதியை இறக்கிவிட்டு அவரிடம் இருந்த நகையைப் பறித்துக்கொண்டதோடு, அவரை உயிரோடு விட்டால் தங்களைக் காட்டிக்கொடுத்துவிடுவார் என்று பார்வதியின் புடவையால் அவரது முகத்தில் வைத்து அழுத்திக் கொலை செய்துள்ளனர்.
உடலை எடுத்து, தங்கள் இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பார்வதியின் உடல் மீது ஊற்றி எரித்துள்ளனர். பாதி எரிந்தும் எரியாத நிலையில் அப்படியே போட்டுவிட்டு வந்துள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து பார்வதியின் ஆறு பவுன் நகைகளைபு் பங்கு போட்டுகு்கொண்டதாகப் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து அருள்சகாயம், விஜய் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று எப்படி கொலை செய்தார்கள் என்பதை விசாரணை மூலம் உறுதி செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர். 6 பவுன் நகைக்காக வயதான மூதாட்டியை இரண்டு இளைஞர்கள் கொலை செய்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.