கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் இருந்து வடமேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எம் .குன்னத்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தம்பிதுரை அந்த கிராமத்திலேயே சொந்தமாக ஸ்டூடியோ வைத்து அப்பகுதி சுற்றுப்பட்டு கிராமங்களில் நடைபெறும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை வீடியோ புகைப்படம் எடுத்துத் தருபவர். அதோடு தினசரி பத்திரிக்கைகளை ஏஜென்சி எடுத்து அவரது கிராமப் பகுதியில் விநியோகித்து வருகிறார். இந்தப் பணிகள் ஒரு பக்கம் அதோடு பொதுமக்களுக்கான தேவைகளை நேரம் காலம் கருதாமல் சேவை மனப்பான்மையோடு செய்து வருபவர்.
உதாரணத்திற்கு கரோனா நோய் கடுமையாக இருந்த நாட்களில் தடுப்பூசி முகாம்களைத் தனது ஊரில் நடத்துவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் வரவழைத்து அவர்களோடு இணைந்து பணியாற்றியவர். அதோடு கரோனா தடுப்பு ஊசி போடுவதற்கு மக்கள் பயந்து தயங்கினார்கள், அப்போது தம்பிதுரை தடுப்பூசி போட வரும் அனைவருக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை தன் சொந்த செலவில் வாங்கி அன்பளிப்பாக ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். இதனால் பலரும் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தம்பி துறையின் செயல்பாடுகளை கண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இது மட்டுமல்ல ஊரில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை பாம்பு கடித்து விட்டது போன்ற அசம்பாவிதம் நேரும் போது உடனடியாக சென்று அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என மக்கள் பணியில் நேரம் காலம் பாராமல் செய்து வருகிறார் தம்பித்துரை.
இந்த நிலையில் மக்கள் பணியை மேலும் தொடர சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அவரது பகுதியில் உள்ள ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். மேலும் சிலர் போட்டியிட்டனர், அதனால் கடும் போட்டி நிலவியது. இருந்தும் 55 வாக்கு வித்தியாசத்தில் தம்பித்துரையை ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக அப்பகுதி மக்கள் தேர்வு செய்துள்ளனர். தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த ஊர் மக்களுக்கு தொடர்ந்து பணி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த தம்பித்துரை வித்தியாசமான ஒரு செயலை செய்துள்ளார். அது குறித்து அவரிடம் கேட்டபோது, “திருமணமாகி மனைவி பிள்ளைகள் என என் குடும்பம் விரிவடைந்தது. அவர்களைக் காப்பாற்ற கிராமத்திலேயே போட்டோ ஸ்டூடியோ துவக்க முடிவு செய்தேன். அதற்கு முதலீடு செய்ய என்னிடம் பணம் இல்லை எங்கள் பகுதியில் இருந்த பல்லவன் கிராம வங்கி மேலாளர் நிர்மல் குமார் அவர்களிடம் சென்று வங்கி கடன் உதவி தருமாறு கேட்டேன். என் மீது நம்பிக்கை வைத்து மூன்றரை லட்சம் கடன் வழங்கினார்.
நாணயமான முறையில் அந்தக் கடனை திருப்பி செலுத்தினேன். பிறகு உள்ளாட்சித் தேர்தல் வந்தது என் கிராமம் மக்களுக்காக தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதன் காரணமாக தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னை 55 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளனர். அவர்களுக்கு என்றும் நான் நன்றிக் கடன்பட்டவன். அந்த நன்றியை அவர்களுக்கு செலுத்தும் விதமாக ஒரு கார் வாங்கி உள்ளேன். இந்த கார் என் கிராம மக்களில் யாருக்காவது பிரசவம், திடீர் உடல் நிலை கோளாறுகள் நேரும்போது அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றும். இப்படிப்பட்ட இன்றியமையாத பணிகளுக்காக 24 மணி நேரமும் செயல்படும் எனது காரில் எனது வாழ்க்கையில் ஒளி பெற செய்த பல்லவன் வங்கி மேலாளர் நிர்மல் குமார் அவர்களின் பெயரை எழுதி வைத்துள்ளேன். அது அவருக்கு நான் காட்டும் நன்றி. அதே போன்று எனக்கு வாக்களித்த எனது கிராம மக்களுக்கு எனது நன்றி காணிக்கையாக இந்த இலவச சேவைக்கு இந்த கார் பயன் படுத்தப்படும்” என்கிறார் தம்பித்துரை.