அரியலூர் மாவட்டம், சித்துடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜதுரை(22). இவர், கடந்த 2021ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, சம்பந்தப்பட்ட சிறுமியின் உறவினர்கள் அப்போது அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் மஹாலட்சுமி ராஜதுரை மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிமன்றம் ஜாமீனில் ராஜதுரை வெளியே வந்தார்.
இந்த நிலையில், அது சம்பந்தமான வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வழக்கறிஞர்கள் வாதம் முடிவுற்ற நிலையில், கடந்த 17ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ராஜதுரைக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பையடுத்து ராஜதுரையை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரியலூரில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்துள்ளனர்.