விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் 37 வயது சிவராமன். திங்கள்தோறும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறும். மழையின் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது. இருந்தும் பொதுமக்கள் பலர் மனு கொடுக்க வந்திருந்தனர். பாதுகாப்புக்காக இருந்த காவல்துறையினர், ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள பெட்டியில் மனுக்களைப் போட்டுவிட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அப்படி மனு அளிக்க வந்த சிவராமன், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
அதில் அவர், தனது உறவினர் பிள்ளைகள் தினேஷ்குமார், திவ்யா ஆகிய இருவரும் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு படிப்பதற்காக விண்ணப்பித்திருந்தனர். ஆனால் தற்போதுவரை அவர்களைக் கலந்தாய்வு கூட்டத்திற்குக் கல்லூரி நிர்வாகம் அழைக்கவில்லை. ஆனால் கலந்தாய்வு கூட்டம் முடிந்துவிட்டதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கல்லூரிக்கு நேரில் சென்று முறையிடலாம் என்று உள்ளே சென்றால் உள்ளேவிட மறுத்து, திருப்பி அனுப்புகிறார்கள். சிபாரிசின் பேரில் வருபவர்களுக்கு மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் போலீசார், அவரது கோரிக்கை எதுவாக இருந்தாலும் மனு அளிக்க வேண்டும். இதுபோல் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.