நேற்று வேலூரில் பட்டாக்கத்தியைக் காட்டி பணம் பறித்த இளைஞர்கள் இருவரை போலீசார் துரத்திப் பிடித்து கைது செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று அதேபோல் சென்னை அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களைப் பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து கத்திகளைப் பறிமுதல் செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை செங்கல்பட்டு அருகே காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் மிதிவண்டிகளில் ரோந்து பணிக்குச் சென்ற பொழுது அங்கு சில இளைஞர்கள் கும்பலாக நின்றுகொண்டிருந்த நிலையில் போலீசாரை கண்டதும் சிதறியடித்து ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்த நிலையில் பிடிபட்ட ஒரு இளைஞனின் வயிற்று பகுதியில் சட்டைக்குள் ஒன்றரை அடி நீளமுள்ள கத்தி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியவர்களை போலீசார் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. அதேபோல் அவர்களிடமிருந்து பட்டாக்கத்தி மட்டுமல்லாது இருசக்கர வாகனம்,போதை ஊசி, மாத்திரை போன்றவைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.