ஏற்காட்டில் கோடை விழா மே 26- ஆம் தேதி தொடங்குகிறது. ஒரு வாரம் இவ்விழா நடக்கிறது.
சேலம் மாவட்டம், ஏற்காடு, தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலா தலங்களுள் ஒன்றாகும். சேலம் மாநகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது, ஏற்காடு. மலைகளின் இளவரசி, ஏழைகளின் ஊட்டி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சேர்வராயன் மலைத்தொடர்ச்சியான ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் தமிழக அரசு சார்பில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி கொண்டாடப்பட்டு வருகிறது.
கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டாக கோடை விழா நடத்தப்படவில்லை. தற்போது கரோனா கட்டுக்குள் உள்ளதால், இந்தாண்டு வெகு சிறப்பாக கோடை விழாவை நடத்தத் தமிழக அரசு எல்லா விதமான ஏற்பாடுகளையும் விரிவாக செய்து வருகிறது. அதன்படி, ஏற்காட்டில் வரும் மே 26- ஆம் தேதி கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி தொடங்குகிறது. வழக்கமாக 3 அல்லது நான்கு நாள்கள் விழாவாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு ஒரு வார காலத்திற்கு விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சேலம் வந்த தமிழக நகராட்சிகள் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியது: ஏற்காட்டில் மே 26- ஆம் தேதி முதல் ஜூன் 1- ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்தாண்டு நடத்தப்பட உள்ள ஏற்காடு கோடை விழா சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் வகையிலும், ஏற்காட்டினை மேம்படுத்தும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஏற்காடு அண்ணா பூங்காவில் அரிய வகையிலான 5 லட்சம் மலர்களைக் கொண்டு மலர்க்கண்காட்சி மற்றும் மாம்பழக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. விழாவையொட்டி, சேலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு ஏற்காட்டின் முக்கிய இடங்களை ஒரு நாள் முழுவதும் சுற்றிக் காண்பிக்கும் வகையில் பேருந்து வசதி செய்யப்பட்டு உள்ளது.
கோடை விழாவின்போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வாகனங்கள் ஏற்காடுக்கு செல்லும்போது சேலம் - ஏற்காடு நெடுஞ்சாலை வழியாகவும், திரும்பிச் செல்லும்போது குப்பனூர் - சேலம் வழியாகவும் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
விழாவின்போது நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள், சுற்றுலா பயணிகள், செல்ல பிராணிகள் கலந்து கொள்ளும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். அரசின் சாதனைகளை விளக்கும் அரங்குகளும் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.