குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாங்கள் கற்றுக் கொள்ளும் கலை பயிற்சிகளை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன், சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பயிற்சி எடுத்துக் கொண்டால் அவர்கள் சாதனையாளர்களாக உருவாகிறார்கள்.
நான்காம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது சிறுவன் ஒருவன் ஒரு மணி நேரம் பத்து நிமிடம், சுருள்வாள் மற்றும் ஒற்றைக் கம்பு சிலம்பத்தை ஒரு மணி நேரம் பத்து நிமிடங்கள் தொடர்ந்து சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான். ஈரோடு மாணவர் எஸ். செங்கதிர்வேலன் தான் அவர்.
புத்தாஸ் சிலம்பம்பாட்ட டிரஸ்ட் மற்றும் ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழகமும் இணைந்து நோபல் உலக சாதனை நிகழ்ச்சியை மாமரத்துபாளையம் சக்தி மசாலா நிறுவன அரங்கில் நடத்தியது. இதில் தான் மாணவர் எஸ். செங்கதிர்வேலன் கலந்து கொண்டு, சுருள்வாள் மற்றும் ஒற்றைக்கம்பு சிலம்பம் ஆகியவற்றை ஒரு மணி நேரம் பத்து நிமிடம் தொடர்ந்து சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று சாதனைப்படைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி பிரபல நிறுவனமான சக்தி மசாலா நிறுவனர்கள் பி.சி.துரைசாமி, டாக்டர் சாந்தி துரைசாமி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. நோபல் உலக சாதனை தலைமை இயக்க அதிகாரி கே.கே.வினோத், தமிழ்நாடு நடுவர் எம்.கே.பரத்குமார் ஆகியோர் உலக சாதனைப்படைத்த மாணவர் எஸ்.செங்கதிர்வேலனுக்கு, விருது மற்றும் அங்கீகார சான்று வழங்கினர். நிகழ்ச்சியில் மாணவர் பெற்றோர் டி.செந்தில்குமார், தீபா செந்தில் குமார், தலைமை பயிற்சியாளரும், ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் ஆர். கந்தவேல் மற்றும் துணை பயிற்சியாளர் ஏ.மணி, எம்.ஆறுமுகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சுருள்வாள் மற்றும் ஒற்றை கம்பு சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவன் செங்கதிர்வேலன் சக்தி மசாலா நிறுவனங்களின் உரிமையாளர்களான துரைசாமி மற்றும் சாந்தி துரைசாமியின் மகன் வழி பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.