உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்களுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவீன செவிலியத்தை உருவாக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே 12- ஆம் தேதியை உலக செவிலியர் தினமாகச் செவிலியர் பேரவை கொண்டாடுகிறது. செவிலியர் பணி என்பது தொழில் அல்ல. ஊதியம், ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு, தாய்க்கு நிகரான பரிவையும், சகிப்புத் தன்மையும் கொண்டு, தொண்டு ஆற்றும் மகத்தான சேவை ஆகும். உலகமெங்கும் கரோனா பரவியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மக்களைக் காக்கும் நைட்டிங்கேல்களாக, தேவதைகளாக ஒவ்வொரு செவிலியரும், இரவு பகல் பாராமல் தங்கள் குடும்பங்களைக் கூட கவனிக்காமல், நோயாளிகளுக்காகப் பணியாற்றி வருகிறார்கள்.
இந்தப் பணியானது, எந்த ஒரு செயலோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத ஒரு சேவை. எனவே அதற்கு நான் தலை வணங்குகிறேன். மேலும், உலக செவிலியர் தினத்தில் செவிலியர்கள் அனைவருக்கும் தே.மு.தி.க. சார்பாக உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.