மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக இயங்கி வரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராமப்புற வறுமை ஒழிப்பு அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும் என்றும், விருதுக்கு தகுதியான அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, “தமிழகம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு மணிமேகலை விருது வழங்க, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் 2.08 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த விருதுக்கு தேர்வு செய்யும் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, 2021-2022ம் ஆண்டிற்கான விருதுக்கு தகுதியான சமுதாய அமைப்புகளிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருதுக்கான முன்மொழிவுகளை, 'திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), இரண்டாம் தளம், அறை எண்: 207, மாவட்ட கலெக்டர் அலுவலகம், சேலம் - 636001,' என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.