கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் உள்ளது கொட்டையூர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் இளையராஜா-தீபா தம்பதியர். அவரது கணவர் இறந்த நிலையில் தீபா தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாளர் வேலை இடம் காலியாக இருந்துள்ளது. அதைப் பெறுவதற்காக கடந்த (24.8.2020) அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குறைகேட்பு புகார் பெட்டியில் அங்கன்வாடி பணியாளர் வேலை கேட்டு மனு அளித்துள்ளார் தீபா. அன்று இரவே ஒரு மர்ம நபர் தீபாவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
அவர் பேசியதாவது, “தான் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். தங்கள் அங்கன்வாடி பணியாளர் வேலை வேண்டி புகார் பெட்டியில் போட்டுள்ள தங்களின் மனு குறித்த விவரம் என்னிடம் வந்துள்ளது. அந்தப் பணியை தாங்கள் பெறுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும்” என தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்பவர் என்ற நம்பிக்கையில் தீபா அந்த மர்ம நபரிடம் ஒரு லட்சம் பணம் தருவதாக சம்மதித்து, அதன்படி முதல் கட்டமாக (18.11.2020) அன்று 50 ஆயிரம் ரூபாயை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார். அதன்பிறகு தீபாவை தொடர்பு கொண்ட அந்த மர்ம நபர் தற்போது கரோனா நோய் பரவல் காரணமாக அரசு வேலை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே மீதி உள்ள தொகையையும் வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார்.
அதனையும் நம்பிய தீபா இரண்டாம் கட்டமாக (16.12.2020) அன்று ஐம்பதாயிரம் ரூபாயை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார். பின்னர் அந்த மர்ம நபரின் செல்போனுக்கு தீபா வேலை விஷயமாக தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல நாட்கள் பலமுறை முயற்சி செய்தும் மர்ம நபரைப் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தீபா கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முகமது அசாருதீன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விதவைப் பெண்ணிடம் அரசுப்பணி ஆசை காட்டி ஒரு லட்சம் பணம் பறித்த அந்த மர்ம மோசடி நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்வதாகக் கூறி மர்ம நபர் ஒருவர் அப்பாவிப் பெண்மணியிடம் ஒரு லட்சம் பணம் பறித்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.