கள்ளக்குறிச்சி மாவட்டம், பாக்கம் புதூர் கிராமத்தில் உள்ள பொது இடுகாட்டில் திடீரென பள்ளம் தோண்டி அது மூடப்பட்ட அடையாளம் தெரிந்துள்ளது. மேலும், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில், புதிதாக தோண்டி மூடப்பட்ட அந்த இடத்தை தோண்டி பார்க்க முடிவு செய்தனர். அதன்படி சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன் தலைமையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை உதவிப் பேராசிரியர் டாக்டர் ராம்குமார், அப்பகுதி போதகர் செந்தில்குமார், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் அண்ணாமலை மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சுடுகாட்டில் அந்த இடத்தை தோண்டிப் பார்த்தனர்.
அந்தக் குழியின் உள்ளே ஒரு சாக்கு மூட்டை இருந்துள்ளது. அதை வெளியே எடுத்துப் பார்த்த போது, மூட்டையின் உள்ளே 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் பிணம் இருந்துள்ளது. மேலும், அவரது வாயில் துணியை கட்டி கொலை செய்து சாக்கு மூட்டையில் வைத்துக்கட்டி புதைத்துள்ளது தெரியவந்தது. இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தடய அறிவியல் அலுவலர் சர்மிளா தடயங்களை சேகரித்தார். அதன் பின் அந்த உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து மீண்டும் அதே குழியில் பெண் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
யாரோ சில மர்ம நபர்கள் கொலை செய்து, சாக்குமூட்டையில் கட்டி கொண்டு வந்து இந்த சுடுகாட்டில் புதைத்து விட்டுச் சென்றுள்ளனர். கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட அந்த பெண் யார்? கொலை செய்தவர்கள் யார்? எதற்காக இந்த கொலையை செய்தனர்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டவற்றைக் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.