நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த முனியப்பன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. மளிகைக் கடை வைத்திருந்த ராமசாமியின் மனைவி அத்தாயி நித்தியானந்தாவின் மீது பக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பட்டணம் பகுதியில் இருந்த நித்தியின் தியான பீடத்திற்கு அடிக்கடி சென்றுவந்த அத்தாயி கடந்த 2017 ஆம் ஆண்டு தனது பெயரில் இருந்த நிலத்தின் மீது 6.40 லட்ச ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு கணவரின் விருப்பம் இல்லாமல் பெங்களூரில் உள்ள நித்தி ஆசிரமத்திற்குச் சென்றுள்ளார். பலமுறை குடும்பத்தினர் வலியுறுத்தியும் அத்தாயி வீட்டுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. வங்கி கடனுக்கான வாய்தா முடிந்த நிலையில் அந்த பெண் சிஷ்யையின் வீடு ஜப்திக்கு வந்துள்ளது.
பெண்ணின் கணவர் பலமுறை கேட்டுக்கொண்டதன் பேரில், கையெழுத்து போட்டவுடன் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அத்தாயி இரண்டு பெண் சிஷ்யைகளுடன் கடந்த 7 ஆம் தேதி நாமக்கல் அனுப்பிவைக்கப்பட்டார். ஜப்தியை நீக்க வேண்டும் என இன்று அந்த பெண் காரில் நாமக்கல் வந்துள்ளார். அவருடன் ஒரு ஆண் இன்னொரு சிஷ்யையும் காரில் வந்துள்ளனர். இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் நித்தியின் பெயர் சொல்லி பெண்களை மூளைச் சலவை செய்து அழைத்துச் சென்றதாகக் கூறி காரை சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்ணை மீட்ட கணவர் மற்றும் குடும்பத்தினர், உடன் வந்த நித்தி சிஷ்யை மற்றும் ஆட்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு விரட்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் கடந்த 7 ஆம் தேதி பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை செய்துவந்த நிலையில், அத்தாயியின் கணவர் ராமசாமி, அவரது மகன் பழனிசாமி மற்றும் நித்தியின் சீடர்கள் அகிலாராணி, சதீயா, ஜெயகிருஷ்ணன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின் ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.