Skip to main content

“உயிருள்ளவரை மறக்க மாட்டோம்யா.. உருகி நிற்கும் குடும்பங்கள்..” - 164 குற்ற ஏட்டினருக்கு புது வாழ்வு அளித்த எஸ்.பி.

 

"Will we not forget the living .. " - S.P. gave new life to the 164  criminals.

 

இது ஒரு டேரிங் அட்டம்ப்ட் என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள். ஈர நெஞ்சோடும் மனிதாபிமானத்துடனும் காவல் சரித்திர குற்றப் பதிவேட்டில் இடம் பெற்று பெருந்தொல்லைகளை அனுபவித்து திருந்திய 164 பேர்களின் பெயர்களை நீக்கி அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் ஒசையின்றிப் வாழ்வு அளித்திருக்கிறார் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார். மாநிலக் காவல் வரலாற்றில் இது போன்று முன்னெப்போதும் நடை பெற்றிராத துணிச்சலான அதிரடி நடவடிக்கை என்றும் காவல் வட்டாரத்தில் பேச்சாகியிருக்கிறது.

 

தமிழ்நாட்டின் ஒவ்வொரு காவல் லிமிட்களிலும், குற்றச் செயல்களிலும் குறிப்பாகக் கொடுங்குற்றச் செயல்களிலும் ஈடுபட்டக் குற்றவாளிகளின் பெயர்கள் காவல் நிலைய சரித்திர குற்றப் பதிவேட்டில் ஏற்றப்பட்டும் ரவுடி லிஸ்ட்களில் பெயரும் பதிவாகி அவைகள் பராமரிக்கப்படும். இது போன்று குற்றப் பதிவேட்டில் என்றைக்கு அவர்களது பெயர்கள் ஏற்றப்பட்டதோ அன்றிலிருந்தே காவல் நிலைய குற்றப்பிரிவு, மற்றும் உளவுப் பிரிவின் கண்காணிப்பிலும், ஷேடோவிலும் அவர்கள் வைக்கப்படுவர். அவர்களின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் ரிப்போர்ட்களாகவும் உரிய துறைக்கு அனுப்பி வைக்கப்படுவது காலம் காலமான நடைமுறை.

 

அந்தப் பதிவேடுகளில் இருந்து பெயர்கள் அவ்வளவு சாதாரணமாக நீக்கப்படுபவை அல்ல. ஆனால் அவைகளில், நன்னடைத்தைக்காரர்களின் பெயர்கள் 25க்கும் மேற்பட்ட வருடக் கண்காணிப்பிற்குப் பின்பு நீக்கப்பட்டது தான் துணிச்சல் என்று காவல் வட்டாரத்தில் ஆச்சர்யப் பார்வையோடு பார்க்க வைத்திருக்கிறது. 

 

மாநில அளவில் எங்காவது சென்சிட்டிவ்வான மோதலோ, கொடுஞ்செயல்கள் நடந்தாலோ மாநில அளவிலான ரவுடி லிஸ்டில் வருகிற மொத்தப் பேர்களும், அல்லது மாவட்ட அளவில் இது போன்று சம்பவம் நடந்தாலும் மாவட்ட அளவிலான ரவுடி லிஸ்ட் பேர்வழிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரால் கைது செய்யப்படுவர்.

 

கேங்க் மோதல்கள், ரவுடிகளின் கொலைகள், பழிக்குப் பழி கொடூரப் படுகொலைகள், சாதீய மோதல் போன்ற பிரச்சினைகள் வெடித்தால் முதன் முதலாகத் தொடர்புடைய காவல் நிலையப் போலீசாரால் கைவைக்கப்படுபவர்கள் இவர்களே. பகலோ, நடுநிசியோ நேரங் காலம் பார்க்காமல் வளைக்கப்படும், ரவுடி லிஸ்ட் புள்ளிகள் உள்ளே வைக்கப்படுவர். கடந்த ஆண்டு ஆபரேஷன் ரவுடி வேட்டையில் 3,325 பேர் கைது செய்யப்பட்டு 1,117 பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக 31.12.21 அன்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் டி.ஜி.பி. சைலேந்திர பாபு.

 

இது போன்று குற்றப்பதிவேடுகளில் இடம் பெற்றவர்களில் சிலர் மனம் திருந்தி எந்த ஒரு குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் அவர்களின் பிழைப்பைப் பார்க்கிறார்கள் என்று சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளருக்குத் தெரிந்தாலும் அவர்கள் பெயரை அவ்வளவு எளிதில் அதிலிருந்து எடுக்க முடியாது. எடுக்கவும் மாட்டார்கள்.

 

இது அவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பங்களுக்கு மன உலைச்சலை ஏற்படுத்தும். இந்த மாதிரியான மனவேதனையில் வாடி வதைபட்டாலும், ரவுடிப்பட்டியலில் உள்ளவரின் வீடு என்ற ஒரே காரணத்திற்காக விலகிப் போன சொந்த பந்தங்கள். வீட்டில் நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் கூட நடக்க முடியாமல் போனது கண்டு பல குடும்பங்கள் மனதிற்குள் புதைத்துக் கொண்டு உள்ளுக்குள் அழுதவர்களும் உண்டு. நிர்மூலமாகிப் போனவர்களும் உண்டாம். தாங்கள் படும் இந்த இன்னல்களைக் கோரிக்கையாக்கியும், எங்களைக் குற்றப்பதிவேட்டிலிருந்து நீக்குங்கள் என்று பலர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. போன்றவர்களுக்கு வருடங்கள் தோறும் திங்கட்கிழமை மனு நாளில் கண்ணீர் கோரிக்கை வைத்தும் அவைகள் நீக்கப்படவில்லையாம்.

 

"Will we not forget the living .. " - S.P. gave new life to the 164  criminals.

 

தொடர்ந்து பணிமாறுதலாகி வரும் மாவட்ட எஸ்.பி.யிடம் மனு கொடுப்பதைப் போன்று தற்போதைய தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியான ஜெயக்குமாரிடமும் நேரிலும், கோரிக்கை மனுவிலும் துயரங்களைச் சொல்லிக் கண்ணீர் விட்டு அழுதவர்களும் உண்டு. இந்தச் சம்பவம் எஸ்.பி. ஜெயக்குமாரை மனதளவில் வெகுவாகப் பாதித்ததுண்டாம். அதையடுத்தே எஸ்.பி. தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலுமுள்ள காவல் நிலையப் பகுதிகளின் சரித்திரக் குற்றப் பதிவேட்டின் ரவுடிகள் லிஸ்ட்டில் அடங்கியுள்ள 1,794 பேர்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு குற்றச் சம்பவங்களிலும் ஈடுபடாமலிருப்பவர்களைக் கண்காணித்து அறிக்கை தரும்படி, தன்னுடைய ஏற்பாட்டிலும் அமைக்கப்பட்ட உளவு அமைப்பு, மாவட்ட கமிட்டி மற்றும் சப்டிவிஷனின் டி.எஸ்.பிக்கள் அடங்கிய குழுவினரிடம் கேட்டிருக்கிறார். அவர்களும் சரித்திரக் குற்றப்பிரவு ரவுடி லிஸ்ட்டிலிருக்கும் 1794 பேர்களையும் அலசி ஆராய்ந்து வேவு பார்த்ததில் 164 பேர் எந்த ஒரு வழக்கு மற்றும் குற்றச் செயல்களிலும் தொடர்ந்து ஈடுபடாமலிருப்பது பற்றிய அறிக்கையினை எஸ்.பி.யிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

 

அதன் பின்  புத்தாண்டு முதல் அவர்களின் நிம்மதிக்காகவும் புனர்வாழ்வு அளிக்கும் வகையிலும் டிச.31 அன்று மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த 164 பேர்களையும் தூத்துக்குடி வரவழைத்த எஸ்.பி. ஜெயக்குமார், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் உங்கள் மீது கடந்த ஐந்து வருடமாக வழக்கு இல்லாததால், திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கிற உங்களின் பெயர்களை காவல் சரித்திரக் குற்றப் பதிவேடுகளியிருந்து நீக்கியுள்ளோம். தொந்திரவு இல்லாமல் உங்கள் குடும்பங்கள் வாழும் வகையில் சுதந்திரமாக வேலை செய்து சட்டத்திற்குப் புறம்பான எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல் நல்லபடியாக வாழ்க்கையை நடத்துங்கள். வருகிற புத்தாண்டு முதல் உங்களனைவரின் வாழ்க்கையும் சிறக்கட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள் என அத்தனை பேரையும் வாழ்த்தியிருக்கிறார் எஸ்.பி.ஜெயக்குமார்.

 

இதைக் கேட்ட அத்தனை பேரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். எங்களுக்கும் எங்களின் குடும்பத்திற்கும் வாழ்வளித்த அரிதிலும் அரிதான செயலாக எங்களைக் குற்றப் பதிவேட்டிலிருந்து நீக்கிய உங்களை உயிர் உள்ளவரை மறக்கமாட்டோம்யா என ஈரமான விழிகளோடு எஸ்.பி.க்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்திருக்கின்றனர்.

 

"Will we not forget the living .. " - S.P. gave new life to the 164  criminals.
பால்ராஜ்

 

குற்றப் பதிவேட்டில் ஏற்றப்பட்ட காரணத்தால் இன்னல்களை அனுபவித்தவர்களில் தாப்பாத்தியைச் சேர்ந்த 61 வயதான பால்ராஜைச் சந்தித்தில், அவரின் கண்களில் பிரகாசம்; நிம்மதி. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “1987ல் தற்செயலா நடந்த கொலை கேசுல மாட்டிக்கிட்டேன் 87ல வழக்குன்னாலும் 89ல என்னய குற்றப் பதிவேட்டில ஏத்திட்டாக. வெளிய வந்து திருந்தி எஞ்சோலியத்தான் பாத்திட்டிருந்தேம்யா. எந்த சம்பவத்திலும் ஈடுபடல. எங்கனயாவது பிரச்சினைன்னா நேரம்னு கூடப் பாக்காம போலீஸ்காரவுக என்யை கூட்டிட்டுப் போயி உள்ள அடைச்சிறுவாக. எனக்கு கடுமையான மன உளைச்சல்யா, ரவுடி லிஸ்ட்டின்னால எம்புள்ளைகளுக்கு பெண்குடுக்க யோசனைப்பட்டு ஒதுங்கிட்டாக.  அவ்வளவு கஷ்டத்த சங்கடத்த அனுபவிச்ச எனக்கு இப்ப விடுதலை குடுத்திருக்காக சந்தோசமாயிருக்கேம் அவுகள நா தெய்வமாப் பாக்ககேம்யா” என்றார் தழுதழுக்க.

 

"Will we not forget the living .. " - S.P. gave new life to the 164  criminals.
இசக்கிராஜ்

 

பொன்னன் குறிச்சியின் இசக்கிராஜ், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ரவுடி குற்றப் பதிவேட்டில் ஏற்றப்பட்டது. அவரைச் சந்தித்தில், “யதேச்சையா நடந்த கொல சம்பவத்தில் என்யைச் சேர்த்திட்டாக ரவுடி லிஸ்ட்லயும் வைச்சுட்டாவ. ஆனா கேசு விடுதலை. எதும் பிரச்சினைனா ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போயிறுவாக, 110 செக்ஷன் கேசுன்னு தூத்துக்குடிக்கு கொண்டு போயிறுவாக. அலைச்சல் போலீஸ் ஸ்டேஷன்னு ரொம்ப சங்கடம். பாடுபட்டு குடும்பத்தக் காப்பாத்த சிரமம். வசதியும் கெடையாது. இதனால எம்பொண்ணுக்கு மாப்ள பாக்க முடியாம சிரமப்பட்டேம்யா. அலைக்கழிப்பு. சிவனேன்னுயிருந்த நா, இதனால் கஷ்டப்பட்டேன். 20 வயசுலயே சேர்த்துட்டாக. 20 வருச தொல்ல குடும்பத்தோட சங்கடப்பட்டோம்யா. ரொம்ப வருஷமா நா எதுலயும் ஈடுபடல. இப்ப எஸ்.பி. ஐயா எனக்கு வாழ்வு குடுத்துறுக்காகய்யா. நிம்மியாயிருக்கேம்யா” என்றார் தெம்பான குரலில்.

 

தூத்துக்குடியின் சிவக்குமார். லோடுமேனாக இருந்தவர்; “திடீர்னு தெரியாம நடந்த சம்பவத்துக்கு ஆளாயிட்டேன். இளவயசுலலே சவுத் ஸ்டேஷன்ல ரவுடி லிஸ்ட்ல சேர்த்துட்டாக நேரங்காலம் பாக்க மாட்டாக. அய்யா கூப்புடுறாகன்னு நட்ட ராத்திரி தூங்கவுடாம ஸ்டேஷனுக்கு கூட்டிப் போயிறுவாக. காலைல வுட்டுறுவோம்னு சொல்றவுக கேசப் போட்டு உள்ள அடைச்சுறுவாக. பெயில்ல வர வக்கீல் பீசு, கோர்ட் செலவுன்னு பதினைஞ்சாயிரம் ஆயிரும். பல தடவ இப்புடி நடந்துருக்கு மனவருத்தம். அழுத்தம் என்னோட கல்யாணத்துக்கு பத்திரிக்கை அடிச்சிட்டேன். அப்ப பாத்து போலீசு கூட்டிப் போனதால எங்கல்யாணமே நின்னுருச்சு. வெளிய வந்து மறுமாசம் கல்யாணம் முடிச்சாப்ல, எம் மனைவியோட போயி எஸ்.பி. அய்யாட்டச் சொல்லி அழுதேன் அய்யாவும், நீ திருத்திட்ட ஒம் பேர எடுத்துவுட்றேம்னு சொல்லி எடுத்துவுட்டு நல்லாயிருன்னு என்னய வாழ்த்தி அனுப்புனாக. இப்ப நா, அவுகளால நிம்மதியா வேலைக்குப் போறேம்யா” என்றார் சந்தோசமாய்.

 

"Will we not forget the living .. " - S.P. gave new life to the 164  criminals.
இசக்கிபாண்டி 

 

பொன்னன் குறிச்சியின். இசக்கிபாண்டி, “என்ன செய்யச் சொல்லுதீக 45 வயசுலருந்தே ரொம்ப சங்கடப்பட்டேன் ரவுடிலிஸ்ட்டுல போயி குடும்பம் புள்ள குட்டிகளோட 22 வருஷமா  சிரமம் தான்யா. இந்த ஊர்ல இசக்கிப்பாண்டின்னு பெயர்ல ரொம்ப பேர் இருக்காங்க. இத சரியா விசாரிக்காம அந்தப் பேர்னறதால என்னய சேர்த்ததுக்கு தொல்லய அனுபவிக்க வேண்டியதாப் போச்சு. இப்ப ஐயா எம்பேர நீக்கிட்டாக. சிரமப்பட்ட நா இப்ப தொந்திரவு இல்லாம வேலயப் பாக்கேம்யா. எனக்கு வாழ்வு குடுத்த ஐயாவ நா கடவுளாப் பாக்கேம்யா” என்றார். திருப்தியான குரலில்.

 

இப்படி ஒருபுறம் குற்ற விஸ்ட்டில் இருப்பவர்கள் திருந்தியவர்கள் என்று தெரிந்ததும் கருணையோடு அவர்களை மன்னித்து புனர்வாழ்வு கொடுத்தாலும், மறுபக்கம் குற்றம் என்று வந்து விட்டால் கடுமை காட்டுகிற எஸ்.பி. ஜெயக்குமார் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எனில் ஜெயில்தான். அதிலும் முகம் சுழிக்கும் குற்றச் செயல் என்றானால் குண்டாசில் தீட்டிவிடுவார். மாவட்டத்தில் போதை கடத்தலில் சிக்கிய 22 பேர் உட்பட மொத்தம் 195 பேர்களைத் தயவு தாட்சண்யமில்லாமல் குண்டாசில் தள்ளியிருக்கிறார் எஸ்.பி. போலீஸ்காரர்கள் தவறு செய்தால் கண்டிக்கிறார். அதே சமயம் அவர்கள் பணியை திறமையாகச் செய்தால் பாராட்டுகிறார் என்கிறார்கள் காவல் வட்டாரத்தினர்.

 

இது குறித்து எஸ்.பி. ஜெயக்குமாரிடம்  கேட்டதில், “இது சம்பந்தமா ரொம்ப பேர் என்ட்ட வந்து முறையிட்டாக. அழுதாங்க. கடந்த அஞ்சு வருஷமா கேஸ்ல சம்பந்தப்படாம அமைதியாயிருந்தவங்கள கமிட்டி மூலம் கண்காணித்து இன்டலிஜென்ஸ் ரிப்போர்ட்டும் வாங்கி 164 பேரையும் வரச்சொல்லியிருந்தோம். உங்கள ரவுடி லிஸ்ட்லயிருந்து எடுத்துட்டோம். புதுவாழ்வு தரப் போறோம் இனிமே கேஸ் வராமப் பாத்துக்குங்கன்னு சொல்லி வாழ்த்துனப்ப. ரொம்ப வருஷமாப் போராடுனோம்யான்னு சொன்னாங்க. குடும்பத்தோட வந்த பெண்கள் இவரு ரவுடின்னு சொல்லி எங்க வீட்டுக்குப் பொண்ணு கட்டவே வரமாட்டேங்குறாங்க ரொம்ப சங்கடப்பட்ட எங்களுக்கு இப்ப நிம்மதி. ஒங்கள மறக்கமாட்டோம்யான்ட்டுப் போனது எனக்கு மனநிறைவு” என்றார்.

 

புனர்ஜென்மம் புதுவாழ்வு பெற்ற குடும்பங்கள் எஸ்.பி.யைக் கொண்டாடுகிறது.