சென்னையில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், பல்வேறு தளர்வுகளை அமல்படுத்தியது தமிழ்நாடு அரசு. பொது மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். திரையரங்குகள், கடற்கரைகள், மீன் மார்க்கெட்டுகள் ஆகியவை கட்டுப்பாடின்றி திறக்கப்பட்டதால் மக்களின் கூட்டம் பெருக்கெடுத்தது. ஆனால், கரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை இந்த இடங்களில் மக்கள் கடைப்பிடிப்பதில்லை. குறைந்தபட்சம் முகக் கவசம் கூட அணிவதில்லை. இதனால் கரோனாவின் மூன்றாம் அலை பரவுமோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது.
அதேபோல, அரசுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரி மைதானங்களை கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனங்கள் முறைகேடாக பயன்படுத்திவருகிறார்கள். குறிப்பாக, 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் தனியார் பயிற்சி மையங்கள், சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடமிருந்து ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதனால் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கட்டாயத்துக்கு ஆளான தனியர் பயிற்சி மையங்கள், அந்த மாணவர்களை மைதானங்களுக்கு அழைத்துவருகிறார்கள்.
பொதுவாக, 15 வயதுக்குட்பட்ட மாணவர்களை கரோனாவின் மூன்றாம் அலை தாக்கும் என்பதால்தான் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு இதுவரை பள்ளிகளைத் திறக்கவில்லை. அதாவது, 15 வயதுக்குட்பட்டவர்கள் வெளியே வரக் கூடாது; வீட்டில் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள். ஆனால், கிரிக்கெட் பயிற்சி என்கிற பேரில் மைதானங்களுக்கு 15 வயதுக்குட்பட்டவர்களை தனியார் பயிற்சி மையங்கள் வெளியே அழைத்து வருவதை அரசும், சென்னை மாநகராட்சியும் கண்டுகொள்ளவில்லை. இதனால் மைதானங்களில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
குறிப்பாக, தரமணியிலுள்ள மத்திய பாலிடெக்னிக் வளாக மைதானத்தை தனியார் கிரிக்கெட் பயிற்சி மையம் பயன்படுத்திவருகிறது. கடந்த 1ஆம் தேதி முதல் இங்கு கிரிக்கெட் பயிற்சியில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஈடுபடுத்திவருகிறார்கள். அங்கு கரோனா கட்டுப்பாடுகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தங்களின் வருவாய்க்காக பயிற்சி என்ற பேரில் சிறுவர்களைப் பயன்படுத்துகின்றன தனியார் பயிற்சி நிறுவனங்கள். மேலும், அரசுக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை தனியார் பயன்படுத்துவது எப்படி? என்றும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
மூன்றாம் அலை பரவலாம் என்கிற எச்சரிக்கை இருக்கும் நிலையில், தியேட்டர்கள், கடற்கரைகள், மீன் மார்க்கெட்டுகள், கிரிக்கெட் பயிற்சிகள் என தொடர்வது கரோனாவைப் பரப்பாதா? என்றும் கரோனா களப்பணியில் இருக்கும் செவிலியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுகுறித்து அரசின் கவனத்துக்கும் சென்னை மாநகராட்சிக்கும் புகார்கள் பறந்துள்ளன. இது தொடர்பாக இரு தரப்பும் ஆலோசிக்கின்றன. இதனால் சில தீவிர கட்டுப்பாடுகளை சென்னைக்குள் அமல்படுத்தலாமா? என்று மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.