திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா என்பது தென்னிந்தியாவில் புகழ்பெற்றது. தீபத்தன்று மட்டும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் இருந்து வருவார்கள். திருவிழா நடைபெறும் 13 நாட்களும் காலை இரவு என இரண்டு முறை சுவாமி வீதியுலா நடைபெறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
கடந்தாண்டு கரோனா பரவலைத் தடுக்க திருவிழா கோவிலுக்குள் மட்டும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்தாண்டு திருவிழாவை நடத்த வேண்டும் என பலதரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடமும் திருவிழாவோடு சம்மந்தப்பட்ட பிரமுகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது, ''கடந்தாண்டு 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் வழியாக டிக்கெட் வழங்கப்பட்டு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு கோவில் பிரகாரத்தில் விழா நடத்தப்பட்டது. இந்தாண்டு 5 ஆயிரம் என்பதை 10 ஆயிரமாக உயர்த்தி பக்தர்களை அனுமதிக்கலாம்.
காரணம், இப்போதுதான் கரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. அருகில் உள்ள மாநிலங்களில் கரோனா தாக்கம் குறையவில்லை. அதேபோல் உலகின் சில நாடுகளில் மீண்டும் கரோனா பரவுகிறது, நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. அதனால் கடந்தாண்டைப் போல இந்தாண்டும் திருவிழாவைக் கோவில் பிரகாரத்தில் வைத்து ஆகம விதிப்படி நடத்தலாம்'' என தன் கருத்தைப் பதிவு செய்தார்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ''ஆன்மீக மக்களின் பாதுகாவலனாக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு உள்ளது. திருவிழா நடத்துவது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை நடத்துவோம். ஆட்சிக்கு வந்த 5 மாதத்தில் கரோனா பரவலை திமுக அரசு கடுமையாகப் போராடி தினசரி பாதிப்பு 32 ஆயிரம் என்பதை ஆயிரத்துக்குள் கொண்டு வந்துள்ளதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இவையெல்லாம் கவனத்தில் கொண்டு முதலமைச்சரின் உத்தரவுப்படி முடிவெடுக்கப்படும்'' என்றார்.
வரும் நவம்பர் 10 ஆம் தேதி தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறவுள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி காலை பரணி தீபமும், மாலை மகாதீபமும் ஏற்றப்படவுள்ளது.