கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் ஒரே மேடையில் விருது வழங்குவது என்பது அரிதிலும் அரிதான ஒன்று என்ற நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் தன்னார்வ அமைப்பு ஒன்று விருதுகள் வழங்கும் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார். அப்பொழுது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் சாதித்த மருத்துவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அதில் தமிழிசை செளந்தரராஜனின் கணவர் செளந்தரராஜனுக்கும் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், கணவருக்கு விருதினை வழங்கினார் தமிழிசை.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, ''எனது கணவர் செளந்தரராஜன் எனக்கு பேராசிரியர், மற்றவர்களுக்கும் பேராசிரியர், பல சிறுநீரக நோயாளிகளுக்கு பாதுகாப்பாக இருந்ததோடு மட்டுமல்லாது, பல சிறுநீரக மருத்துவர்களை உருவாக்கியவர். அவருக்கு விருது கொடுத்தது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதையும் நானே கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனது வாழ்வின் முக்கியமான தருணம்'' என்றார்.