சேலம் மாவட்டம், குகை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் அரவிந்த்(32). இவர் ஐ.டி. படிப்பை முடித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், இவரும், இவருடன் வேலை பார்த்து வந்த சுஜிதா(32) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஐஸ்வர்யா(7) என்ற பெண் குழந்தை இருந்தார்.
தனது குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் தன்னுடைய வேலையை சுஜிதா ராஜினாமா செய்துவிட்டார். இந்த நிலையில், நாவலூரை அடுத்துள்ள தாழம்பூர் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வங்கிக் கடன் மூலம் வாங்கி மூவரும் அந்த இடத்தில் குடியேறினர். அரவிந்த் ஒருவரின் மாத ஊதியத்தில் மட்டும் வீட்டுக் கடன் மற்றும் வீட்டு அலங்காரங்களுக்காக வாங்கிய கடன் ஆகியவற்றையும் அடைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரவிந்த தன்னுடன் பணியாற்றும் நண்பர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, வீட்டுக் கடனை முறையாக செலுத்தாத காரணத்தால் வங்கி தரப்பில் இருந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு வந்த அரவிந்த், இனி முறையாக மாத தவணை கட்டுவதாக எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், அரவிந்த் தன்னுடைய மொத்த கடனை அடைக்க தனது பெற்றோர் மற்றும் மனைவியின் பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதால் இருவீட்டாரும் பணம் கொடுக்க மறுத்திருக்கின்றனர். இதன் காரணமாக அரவிந்த், கடந்த இரண்டு மாதங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தொலைப்பேசி மூலம் அழைத்த அரவிந்த், தன்னுடைய மனைவி சுஜிதா மற்றும் மகள் ஐஸ்வர்யா ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய மாத்திரைப் போட்டுக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த தகவல் கேட்ட தாழம்பூர் காவல் ஆய்வாளர் வேலு, காவல் துணை ஆய்வாளர் கமல தியாகராஜன், கோபி ஆகியோர் அரவிந்த் கூறிய இடத்திற்கு விரைந்தனர். அப்போது, வீட்டினுள் அரவிந்த் நாற்காலியில் மயக்கநிலையில் அமர்ந்தபடி இருந்துள்ளார். அதையடுத்து, அருகில் இருந்த படுக்கை அறையில் பார்த்தபோது, சுஜிதா கையில் வெட்டுக்காயத்துடன் சடலமாக இருந்துள்ளார். அவர் அருகிலேயே அவர்களது மகள் ஐஸ்வர்யா உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.
மயக்க நிலையில் இருந்த அரவிந்தை மீட்ட காவல்துறையினர் ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சடலமாக இருந்த சுஜிதாவையும், ஐஸ்வர்யாவையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அரவிந்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் அரவிந்த், தனக்கு ஏராளமான கடன் இருந்ததால் தன்னுடைய குடும்பத்துடன் இறந்து விடலாம் என்று நினைத்துள்ளார். இதையடுத்து கடந்த 16 ஆம் தேதி இரவு உணவு அருந்தி விட்டு தன்னுடைய மனைவிக்கும் மகளுக்கும் அதிகளவு மயக்க மாத்திரை கொடுத்துள்ளார். தன்னுடைய மனைவி மயக்கமடைந்ததும் அவருடைய மணிக்கட்டில் உள்ள நரம்பினை துண்டித்துள்ளார்.
பின்னர் அரவிந்த் தானும் தற்கொலை செய்துகொள்ள அதே மாத்திரையை உட்கொண்ட பிறகு தன்னுடைய கை நரம்பையும் அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஆனால், நேற்று காலை தனக்கு மயக்கம் தெளிந்து விழிப்பு ஏற்பட்டு பார்த்தபோது, தான் கையில் அறுத்துக்கொண்ட இடத்தில் நரம்பு அறுபடாமல் போனதால் தான் பிழைத்துக்கொண்டு இருப்பதை உணர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பக்கத்து அறைக்குச் சென்று பார்த்து போது தன்னுடைய மனைவியும், மகளும் இறந்து இருப்பதை உணர்ந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, சுஜிதாவின் தந்தை சிவகுமாருக்கு தொலைப்பேசி மூலம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, சுஜிதாவின் தந்தை சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் காவல்துறையினர் அரவிந்தின் வீட்டை சோதனை செய்துள்ளனர். அதில் அரவிந்த் பல தகவல்களை ஆங்காங்கே எழுதி வைத்துள்ளார். குறிப்பாக கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பதற்காக அரவிந்த் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து மடிக் கணிணி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த லேப்டாப்பை அதன் பையில் போட்டுவிட்டு அதன் மேல் ஒரு பேப்பர் வைத்துள்ளார். அதில், அந்த நிறுவனத்தின் பெயர், அதிகாரியின் பெயர் ஆகியவற்றை எழுதி அவர்களிடம் லேப்டாப்பை சேர்த்து விடுமாறு எழுதி இருந்தார்.
சம்பவ இடத்தை பள்ளிக்கரணை காவல் இணை ஆணையர் ஜோஸ் தங்கையா, கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமரன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.