
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டு வருகின்றது. வரும் 31ம் தேதியோடு தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைவதால் மாவட்ட ஆட்சியர்களோடு முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று காலை மருத்துவ வல்லுநர் குழுவோடு முதல்வர் ஆலோசனை நடத்தினார். அலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டது.
குறிப்பாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் எடுக்க வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் நேற்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் தனிநபர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம், வெளிமாநிலம் செல்ல இ-பாஸ் எடுக்க தேவையில்லை என்று கூறியிருந்தது. ஆனால் இன்றைக்கு தமிழக அரசு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவித்துள்ளது. மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வரைமுறை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.