சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன், "காற்று உந்துதல் குறைவாக இருந்ததால் அழுத்தம் ஏற்படாமல் வங்கக்கடலில் தாழ்வுப் பகுதி உருவாகவில்லை. காற்று சுழற்சி காரணமாக, தற்போது கனமழை பெய்துவருகிறது. நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று (25/11/2021) மிக கனமழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்றுவரை பெய்ய வேண்டிய மழை அளவு 33 செ.மீ. ஆகும். பெய்த மழையளவு 54 செ.மீ. ஆகும். கடலோர மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும். சென்னையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது; நாளை கனமழை பெய்யக்கூடும்.
குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். எனவே, குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தியுள்ளார்.