பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இவ்வழக்கின் குற்றவாளிகளான திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன், சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அருளானந்தம் உட்பட 4 பேர் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இவ்வழக்கை ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை ரகசியமாக நடக்க வேண்டும் என்பதால், நீதிமன்றத்தில் பூட்டிய அறைக்குள் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நடந்தும் வருகிறது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (அக். 20) ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்கள், நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் நகல் 9 பேரிடமும் வழங்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை அக். 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில் சேலம் சிறையிலிருந்து திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேரும் கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றத்திற்கு காவல்துறை வாகனத்தில் அழைத்துவரப்பட்டனர். நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த பிறகு அவர்கள் அனைவரும் மீண்டு அதே காவல்துறை வாகனத்தில் சேலத்திற்குத் திரும்பினர். அப்போது, கோவை நீலாம்பூர் பைபாஸ் சாலையில் நடுரோட்டில், அந்த வாகனம் நிறுத்தப்பட்டு குற்றம்சாட்டப்பட்டுள் அவர்கள் தங்கள் உறவினர்களைச் சந்தித்துப் பேசினர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷ்னர் நஜ்முல் கோடா விசாரணைக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேரை கோயம்புத்தூருக்கு அழைத்துவந்து, சேலத்திற்கு அழைத்துச் சென்ற ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ சுப்ரமணியம், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்திக் உள்ளிட்ட 7 காவலர்களையும் கமிஷ்னர் நஜ்முல் கோடா பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 7 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அவ்விசாரணையில் அவர்கள், “மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு வண்டியை நிறுத்தி கைதிகளை உறவினர்களிடம் பேச வைத்தோம். கோவை நீதிமன்றத்தில் வைத்து அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என கைதிகளின் உறவினர்கள் எங்களிடம் கேட்டனர். ‘நீண்ட நாட்களாக அவர்கள் மட்டன் பிரியாணி சாப்பிடவில்லை என்றும், நீங்களும் பசியாக இருப்பீர்கள், அனைவருக்கும் வீட்டில் இருந்து தயாரித்த மட்டன் பிரியாணி கொண்டு வந்துள்ளோம்...’ என எங்களிடம் உறவினர்கள் கேட்டனர். நீதிமன்றத்தில் வைத்து எந்தவொரு பொருளும் வாங்கக் கூடாது என்பதால், நீலாம்பூர் பைபாஸ் சாலை வரை வாகனத்தை பின் தொடர்ந்து வந்து, பிரியாணியை கொடுத்தார்கள். பின்னர் கைதிகளுடன் உறவினர்கள் பேச வைத்தோம். 7 நிமிட நேரம் மட்டுமே இந்தப் பேச்சு நடந்தது. பின்னர் பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொண்டு அனைவரும் வேனில் வைத்து சாப்பிட்டு கொண்டே வந்தோம்” என்று தெரிவித்திருக்கிறார்கள். விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.