டெல்லியில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறும். இதில், அந்தந்த மாநிலங்களின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள் அமைந்திருக்கும். அந்தவகையில் இந்தாண்டுக்கான அலங்கார ஊர்தியை டெல்லி, தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் உருவாக்கியிருந்தது. ஆனால், இந்த ஊர்திகளை அங்கீகரிக்கும் மத்திய அரசு அமைத்த குழுவினர் இந்த குறிப்பிட்ட மாநிலங்களில் சார்பில் வைக்கப்பட்ட அனைத்து அலங்கார ஊர்திகளையும் நிராகரித்தனர்.
தென் மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர மற்ற அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டன. அதேபோல், மேற்குவங்க மாநிலத்தின் அலங்கார ஊர்தியும் நிராகரிக்கப்பட்டது. தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது தமிழ்நாட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேற்குவங்க மாநிலம் சார்பாக அணிவகுப்பில் பரிந்துரைக்கப்பட்ட நேதாஜி ஊர்தி நிராகரிக்கப்பட்டதால் மத்திய அரசுக்கு எதிராக அம்மாநிலத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதுதொடர்பாக அம்மாநில அரசு மத்திய அரசுக்கு தங்களின் வருத்தத்தை தெரிவித்திருந்தது.
இதற்கிடையே நேற்று டெல்லியில் நேதாஜிக்கு பெரிய அளவிலான சிலை இந்தியா கேட் பகுதியில் வைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, " பிரதமருக்கு வங்கம் என்றால் ஏன் இவ்வளவு அலர்ஜி என்று தெரியவில்லை. ஊர்தி அணிவகுப்பில் நாங்கள் காட்டிய எதிர்ப்புக்கு பயந்து தற்போது சிலை அமைக்கப்படும் என்று பிரதமர் கூறுகிறார். வங்க மக்களின் கோபத்திற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று காட்டமாக கூறியுள்ளார்.