திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு வனத்துறை சார்பாக ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா 867.00 லட்சத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
ஆனா தற்போது ஆசியாவிலேயே 25 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் அருகே செயல்பட்டு வருகின்றது. பூங்காவில் நூற்றுக்கணக்கான வகை வண்ணத்துப்பூச்சி குறித்த தகவல் பூங்காவில் ஆங்காங்கே தகவல் பலகைகளில் இடம்பெற்றுள்ளன.
வண்ணத்துப்பூச்சி பூங்கா குறித்த பெயர் மற்றும் வகைகள் தகவல் பலகைகளில் உள்ளன ஆனால் வண்ணத்துப்பூச்சி வகை புகைப்படம் வேறாகவும் பெயர் வேறாகவும் இடம்பெற்றுள்ளது . இதனால் வண்ணத்துப்பூச்சி குறித்த தகவல்கள் பார்வையாளர்களிடம் கல்வி மாணவர்களிடமும் தவறாக எடுத்துக் கொள்ளப்படும் சரியான தகவல் பலகை வைக்க வேண்டும் என வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
வண்ணத்து பூச்சி பூங்காவிற்கு தினசரி 200 பார்வையாளர்கள் வந்து செல்கின்றார்கள். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் 1000 முதல் 2000 பார்வையாளர்கள் வந்து செல்கின்றார்கள். வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு என தமிழ்நாடு அரசு சார்பில் சமீபத்தில்தான் போக்குவரத்து வசதி ஏற்படு செய்தனர். மேலூர் வரை தற்போது பேருந்து இயக்கம் இருக்கின்றது. தற்போது சிற்றுந்து மட்டும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வருகின்றது.
நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறியவர்களுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வீடியோ கேமராவிற்கு 1000 புகைப்பட கேமராவிற்கு 500 வசூலிக்கப்படுகிறது. DSLR அல்லாத கேமராவிற்கு 200 வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணம் பார்வையாளர்களுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது தற்போது பார்வையாளர்கள் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
செயல்படாத உள்ளரங்கம்
ஒரு ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துபூச்சிகளின் உற்பத்தி பெருக்குவதற்கான நவீன வசதிகள் கொண்ட உள்ளரங்கு கட்டப்பட்டுள்ளது. இங்கு வண்ணத்துப்பூச்சிகள் நவீன தொழில்நுட்ப முறையிலும் இயற்கை முறையிலும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. உள்ளரங்கில் வண்ணத்து பூச்சிக்காக உணவு தாவரங்களும் மலர் தாவரங்களும் உள்ளன. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உள்ளரங்கு செயல்படாமல் உள்ளது. உள்ளரங்கு நோக்கமானது பொதுவெளியில் வண்ணத்துப் பூச்சியினை கண்டுகளிப்பது உள்ளங்கையிலேயே அனைத்து வகையான வண்ணத்துப் பூச்சிகளையும் கண்டுகளிக்க வடிவமைக்கப்பட்டது. தற்போது பழுதடைந்துள்ள காரணத்தினால் உள்ளரங்கில் பார்வையாளர்கள் சென்று ஒரே நேரத்தில் வண்ணத்து பூச்சி பூங்காவை பார்வையிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இயக்கப்படாத பேட்டரி கார் ?
25 ஏக்கரில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பெரியவர்கள் சுற்றி வரும் வகையில் பேட்டரி கார் விடுவதற்கு திட்டம் இருந்தது. ஆனால் நிதி பற்றாக்குறையினால் திட்டம் கிடப்பில் இருக்கிறது. இதனால் குடும்பத்துடன் வரும் பெரியோர்கள் சரியாக வண்ணத்துப்பூச்சி பூங்காவை சுற்றிப் பார்க்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். விரைவில் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்
நிதி நெருக்கடியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா !
தற்போது வாரம் இரண்டு லட்சத்திற்கு மேல் செலவாகிறது. மின்சாரக்கட்டணம் மாதம் பல லட்சம் வருவதாகவும் கூறுகிறார்கள். இதனால் பெரும் நிதி நெருக்கடியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா இருப்பதால் நுழைவு கட்டணம் முதல் வாகன கட்டணம் வரை உயர்த்தப்பட உள்ளார்கள். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
நீர் பற்றாக் குறையினால் பட்டுப்போகும் மரங்கள்
பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகள் விரும்பி உண்ணும் தாவரங்களான சின்யா, பென்டாஸ், டிரைக்டரி, கோபி, அஸ்காப்பியா போன்றவையும் பல்வேறு வகையான மலர்ச்செடிகளும் குறுமரங்கள், குறுஞ்செடிகள், புற்கள் போன்றவையும் அது தவிர ஏராளமான மரங்களும் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. தற்போது 298 வகையான தாவரங்கள் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழகமெங்கும் வறட்சியினால் ஆறுகள் வறண்டு கிடக்கும் நிலையில் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆழ்குழாய் கிணறு மூலமாக நீரை எடுத்து பயன்படுத்திவருகிறார்கள். பொதுவாக நீர் இருக்கும் இடங்களில் வண்ணத்துப் பூச்சிகள் அதிகமாக இருக்கும் தற்போது உணவுத் தாவரங்கள் நீர் பற்றாக் குறையினால் பட்டுப்போய் வருவதால் உணவுத் தாவரங்கள் அழியும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
பூங்காவில் 38 வகையான வண்ணத்துப் பூச்சிகள் ஆரம்ப நிலையில் இடம் பெற்று இருந்தன. தற்போது 103 வண்ணத்துப் பூச்சி வகைகள் பூங்காவில் வாழ்வதாக குறிப்புகள் சொல்லக் கூடிய நிலையில் பூங்காவை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள். 298 வகையான தாவரங்கள் 103 பூச்சி வகைகள் 20 வகை பறவை இனங்கள் இங்கு உள்ளது. ஆசியாவிலேயே திருச்சியை திரும்பிப் பார்க்கும் வகையில் வைத்துள்ளது.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சின்னங்களில் ஒன்றாக தமிழ் மறவன் பட்டாம்பூச்சி வனத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணத்துப்பூச்சி கூட இங்க இல்லை என்பதுதான் அதிர்ச்சியான விசயம்.
வண்ணத்துபூச்சிக்கு என்று ஸ்பெஷலாக அமைக்கப்பட்ட இந்த பூங்காவிற்கு 25 ஏக்கர் ஒதுக்கப்பட்டு இருந்தாலும் 10 ஏக்கர் சும்மாதான் கிடக்கிறது. திறமையில்லாத நிர்வாகம் என்கிற ஒரே காரணத்திற்காக ஆசியாவிலே மிகப்பெரிய வண்ணத்துபூச்சி பூங்காவின் இன்றைய நிலை பரிதாபநிலையில் உள்ளது.
இந்தநிலையில் புதுக்கோட்டைக்கு ஒரு மீடிங்கிற்கு வந்த வனத்துறை முதன்மை செயலாளர் தீடீர் என ஸ்ரீரங்கம் வண்ணத்துபூச்சி பூங்காவிற்கு விசிட் செய்து இதை மேம்படுத்துவதற்கு 78 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி ராஜ கோபுரமும் ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவும் பேணி பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
இந்த நிதியை சரியாக பயன்படுத்தி இந்த பூங்காவின் தரத்தை உயர்த்துவார்களா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.