திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நான்கு நகராட்சிகளில் இரண்டாவது பெரிய நகராட்சி ஆரணி. வருவாய் ரீதியில் மிக முக்கிய நகராட்சி. ஆரணி பட்டுப்புடவை தமிழகத்தில் பிரபலமானது. அதேபோல் கேரளா, கர்நாடகாவில் ஆரணி பட்டுத்தான் கோலோச்சுகிறது.
ஆரணி நகராட்சியில் மொத்தம் 33 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் ஆளும்கட்சியான திமுகவிடம் 12 கவுன்சிலர்களும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸிடம் 2 கவுன்சிலர்களும், மதிமுகவிடம் 2 கவுன்சிலர்கள், விசிகவிடம் ஒரு கவுன்சிலர் என 17 கவுன்சிலர்கள் இந்த தரப்பிடம் உள்ளனர். அதிமுகவிடம் 15 கவுன்சிலர்களும், சுயேட்சை கவுன்சிலர் ஒருவர் என உள்ளனர். ஆளும்கட்சியான திமுக, எதிர்கட்சியான அதிமுக இரண்டும் சமபலத்துடன் இருப்பதால் சேர்மன் பதவியை மறைமுக தேர்தலில் பிடித்து பட்டு நகரை ஆளப்போவது யார் என்கிற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது. ஆரணி நகராட்சியின் சேர்மன் பதவி பொது பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களில் பெரும்பான்மை கவுன்சிலர்கள் முடிவு செய்தால் ஆண் – பெண் யார் வேண்டுமானாலும் சேர்மன் பதவியில் அமரலாம்.
ஆளும் கட்சியான திமுக தரப்பில் திமுக நகரச் செயலாளர் ஏ.சி.மணி, நகரமன்றத் தலைவராக ஆசைப்படுகிறார். தேர்தல் நேரத்தில் தங்களது கட்சி, கூட்டணி கட்சியென ஒவ்வொரு கவுன்சிலர் வேட்பாளருக்கும் 7 முதல் 10 லட்சம் வரை செலவுக்காக தந்தார். இதனால் இவரே சேர்மன் வேட்பாளர் என்கிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ சிவானந்தம் மகன் பாபு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். சேர்மன் பதவிக்கு முயற்சித்தவர், தற்போது வைஸ்.சேர்மன் பதவியை பிடிக்க முயற்சிக்கிறார். ஆரணி நகராட்சியில் கோஷ்டிபூசலால் 15 வார்டுகளை அதிமுகவிடம் தோற்றுப்போய் நிற்கிறது திமுக.
அதிமுகவில், மாவட்ட பால்கூட்டுறவு சேர்மன் பாரி.பாபு, நகராட்சி தலைவர் பதவியில் அமரவேண்டும் என்பதற்காகவே கவுன்சிலர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார். திமுகவை விட அதிக அளவு கவுன்சிலர்கள் இருப்பதால் ஆளும் கட்சியோடு மோதி பார்க்கலாம் என ஆலோசித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், ஆரணி தொகுதி எம்.எல்.ஏவுமான சேவூர்.ராமச்சந்திரன் பின்வாங்கிவிட்டார். இரட்டை இலை சின்னத்தில் நின்று கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ள தன்தம்பி ஏ.சி.பாபுவை வைஸ் சேர்மனாக்கவதாக இருந்தால் நான் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்கிறேன் என புதியநீதிக்கட்சி ஏ.சி.சண்முகம் திமுக, அதிமுக என இரண்டு தரப்பு நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திவருகிறார். திமுக நிர்வாகிகளுடன் தினமும் பேசிவருகிறார் ஏ.சி.பாபு.
பெரியளவில் திமுக தரப்பில் கவுன்சிலர்களுக்கான பலமில்லை என்றாலும், 15 கவுன்சிலர்கள் வைத்துள்ள அதிமுக வீக்காக இருப்பதால் திமுக தெம்பாக உள்ளது. அதிமுகவில் தனிப்பட்ட செல்வாக்கில், லட்சங்களில் செலவு செய்து வெற்றி பெற்ற கவுன்சிலர்களில் 5 பேர் திமுக ஆதரவு நிலையெடுக்க தயாராகவுள்ளார்கள்.
ஆரணியில் அரசியல் சடுகுடு திமுக – அதிமுக இடையே தொடங்கியுள்ளது.