கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் கூடுதல் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் நேற்று (24/12/2021) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய கீழ்அனுவம்பட்டு விவசாயி ரவீந்திரன், "கடலூர் மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்த கணக்கெடுப்பு அதில் அகற்றப்பட்டது குறித்து மாவட்ட நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஆக்கிரமிப்புகளைக் கண்காணிக்க ஒன்றிய அளவில் துணை ஆட்சியர் தலைமையிலான குழு அமைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
மாவட்டத்தில் 23 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டதாகவும், 13,000 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு முறையாக நடக்கவில்லை. மழைக்காலங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.
விவசாயி மாதவன் பேசுகையில், "கடலூர் மாவட்டம் தொடர்ந்து இயற்கை பேரிடர்களால் பாதிப்புக்குள்ளாகிவருகிறது. எனவே பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, மத்திய அரசு நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். சமீபத்தில் பெய்த மழையால் ஒரு லட்சம் ஏக்கரில் நெல், மணிலா, உளுந்து, பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமாகியுள்ளன. உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலிருந்தும் கலந்துகொண்ட விவசாயிகள், அந்தந்த பகுதியின் குறைகளை எடுத்துக் கூறினர்.
இவற்றுக்குப் பதிலளித்த கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், “மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி படிப்படியாக ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என பதிலளித்தார்.