சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இனஉரிமை, மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் இயங்குவதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவு அடைந்ததையொட்டி, மாநிலம் முழுவதும் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை என்ற பெயரில் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.
சேலம் மாவட்டம், ஆத்தூரில், அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 24) நடந்தது. இக்கூட்டத்தில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசியதாவது, "கரோனா தொற்று தீவிரம் தணிந்து விட்டதால் பொதுக்கூட்டம் நடத்துவதைத் தொடங்கி இருக்கிறோம். தலைமைக் கழகம் அறிவிக்கின்ற கூட்டங்கள் மட்டுமின்றி, தெருமுனை கூட்டங்கள், பாசறை கூட்டங்கள் போன்ற சிறு சிறு கூட்டங்கள் மூலம் மக்கள் மனதில் அரசின் சாதனைகளை பதிய வைக்க வேண்டும்.
தி.மு.க. தொடங்கி, 70 ஆண்டுகளைக் கடந்து அதே எழுச்சியோடு உணர்ச்சியோடு இருக்கிறது என்றால், ஆளுங்கட்சியாக இருக்கும்போது செய்த சாதனைகள் மட்டுமின்றி, எதிர்க்கட்சியாக இருந்தபோது செய்த போராட்டங்கள்தான் காரணம் என்பதை மறந்து விடக்கூடாது. நம்முடைய சாதனைகளை மறைக்க முடியாது. போராட்டங்களை மறக்க முடியாது. தி.மு.க.தான் தமிழ்நாட்டின் விடியலுக்கும், தமிழ் மக்களின் வாழ்வுக்கும் பாதுகாப்பு. தமிழ்நாட்டு மக்களின் மனதில் ஆழமாக பதிவதற்கு காரணம், நம்முடைய கொள்கை பரப்புரைகள்தான்.
எத்தனை நச்சு சக்திகள் முளைத்து, கழகத்திற்கு எதிரான விஷம பிரச்சாரம் செய்தாலும் கழகம் யாராலும் வீழ்த்த முடியாத சக்தியாக இருக்கக் காரணம், நம்முடைய பிரச்சாரங்கள்தான். அதற்குக் காரணம் நீங்கள்தான். இத்தகைய பரப்புரை பணிகளை நாம் எப்போதும் விட்டுவிடக்கூடாது. மக்களிடம் தொடர்ந்து பரப்புரை செய்யுங்கள். உங்களின் பரப்புரைதான் கட்சியை வலுப்படுத்தும்.
இது எனது அரசு என்று எப்போதும் சொன்னதில்லை. இது நமது அரசு. இந்த ஆட்சியை நான் மட்டும் நடத்தவில்லை. நாம் அனைவரும் சேர்ந்துதான் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லுகிறோம். திராவிட மாடல் என்றால் என்ன? என்று சிலர் கேட்கிறார்கள். சமத்துவமும் சமூகநீதியும் என்னவென்று கூட சிந்திக்கத் தெரியாதவர்களிடம் இருந்து இந்தக் கேள்வி எழுகிறது.
இல்லாத போலி பிம்பங்களை கட்டமைக்கத் தெரிந்த அவர்களுக்கு, இருப்பதை கண் திறந்து பார்க்க மனசு இல்லை. ஆனால் பெரியார், அண்ணா, கலைஞர் என இந்த சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களின் வளர்ப்பாக இருக்கக்கூடிய நமக்கு, திராவிட மாடலை வளர்க்கும் கடமை இருக்கிறது. மானுட சமுதாயத்தை மேம்படுத்தக்கூடிய முற்போக்குக் கருத்துகளை உயர்த்திப் பிடிக்கக்கூடிய திமுக தொண்டர்கள், திராவிட மாடலை எட்டுத் திசைக்கும் விளக்கிச் சொல்லுங்கள்.
நாம் அனைவரும் சேர்ந்து நடத்தும் இந்த ஆட்சியின் இலக்கணமாக திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் அடங்கி இருக்கிறது. திராவிடம் என்ற சொல் ஒரு காலத்தில் இனத்தின் பெயரால், இடத்தின் பெயரால், மொழியின் பெயரால் வழங்கப்பட்டு வந்திருந்தாலும் இன்று திராவிடம் என்றால் ஒரு அரசியல் தத்துவத்தின் பெயராக இருக்கிறது.
அத்தகைய அரசியல் தத்துவத்தை எத்தனையோ பெரிய மேதைகள் சேர்ந்து நமக்கு உருவாக்கிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். பண்டிதர் அயோத்திதாசரும், பெரியாரும் நமக்கு திராவிடயியல் கோட்பாட்டை உருவாக்கித் தந்தார்கள். சர். பிட்டி. தியாகராயரும், டி.எம்.நாயரும், டாக்டர் நடேசனாரும் உருவாக்கிய சமத்துவம்தான் சமூகநீதி தத்துவம்.
சாதியை ஒழித்தல், சமூக விடுதலை குறித்து பாரதிதாசனும் நமக்கு உணர்த்தி விட்டுச் சென்றுள்ளார். மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரும் நமக்கான பெண் விடுதலைச் சிந்தனைகளை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இனமான உணர்வைப் பெறவும், மாநில உரிமைகளுக்காக வாதிடவும் அண்ணாவும், பேராசிரியரும் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். ஒரு நவீன தமிழகம் எந்தெந்த வகையில் எல்லாம் இருக்க வேண்டும் என்பதை கலைஞர் நமக்குக் காட்டியிருக்கிறார்.
சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இனஉரிமை, மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் இருக்கும் இயக்கம்தான் தி.மு.க. அத்தகைய இயக்கம் நடத்தும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இல்லாமல், சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒன்று சேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் காண விரும்பிய ஆட்சி.
தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகமாக வேண்டும். வேலைவாய்ப்பு அதிகமாக வேண்டும். தனிநபர் வருமானம் அதிகமாக வேண்டும். மக்களின் சமூக மரியாதை உயர வேண்டும். இதைத்தான் திராவிட மாடல் ஆட்சி உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் இயற்கை வளம் இருக்கு. சீரான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கு. மனித வளம் இருக்கு. சமூக பொறுப்புணர்வு இருக்கு. உலகறிந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள். இந்த அடித்தளத்தை கொண்டு வர நினைக்கிறோம். நம்மால் வளர முடியும். நம்மை வளர்க்க திராவிட மாடலால் மட்டும்தான் முடியும்.
திராவிட மாடல் என்பது எதையும் சிதைக்காது; சீர் செய்யும். யாரையும் பிரிக்காது; அனைவரையும் ஒன்று சேர்க்கும். யாரையும் தாழ்த்தாது; அனைவரையும் சமமாக நடத்தும். யாரையும் புறக்கணிக்காது; தோளோடு தோள் நின்று அரவணைக்கும். அத்தகைய அடிப்படையில்தான் இந்த ஆட்சி நடந்து வருகிறது. மிகப்பெரிய தொழில்நிறுவனங்கள் உருவாக்குவதற்கு திட்டங்கள் தீட்டினாலும், ஓர் ஏழை எளிய நரிக்குறவ பெண்ணின் கோரிக்கையையும் காது கொடுத்துக் கேட்கக்கூடிய அரசுதான் நம்முடைய அரசு என்பதை மறந்து விடக்கூடாது.
கோடிக்கணக்கான மதிப்பிலான திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் அதே நேரத்தில் இருளர் இன மக்கள், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை ஏற்று அவர்களின் மனம் குளிரும்படி திட்டங்களை தீட்டுவதுதான் இந்த அரசு. இந்த திராவிட மாடல் தத்துவத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்துகிறது என்பதை கழக செயல்வீரர்கள் நாட்டு மக்களுக்கு திரும்ப திரும்பச் சொல்லுங்கள். இது ஒரு கட்சியின் அரசு அல்ல. ஓர் இனத்தின் அரசு என்பதை சொல்லுங்கள்.
ஐந்து ஆண்டுகள் மட்டுமல்ல. இனி தமிழ்நாட்டை தி.மு.க. மட்டுமே ஆளுமேயானால், தமிழ்நாடு என்பது உலகளவில் சிறந்த மாநிலமாக மாறும் என்பதை சொல்லுங்கள். நிதிநிலை மட்டும் இன்னும் சீராக இருக்குமானால் இன்னும் ஏராளமான திட்டங்களை தீட்டி இருக்க முடியும். ஆனால் படிப்படியாக நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் அண்ணா மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்... உறுதியாக நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன்.
நான் கொடுத்த வாக்குறுதியை மக்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். இந்த ஓராண்டு காலத்தில் எவ்வளவு சாதனைகள் செய்திருக்கிறோம் என்று சொன்னால், இத்தகைய நிதிநெருக்கடியை பொறுத்துக் கொண்டுதான் செய்திருக்கிறோம். உழைப்பு உழைப்பு உழைப்பு என்று கலைஞர் என்னைப் பற்றிச் சொன்னார். அந்த வகையில் இந்த நாட்டு மக்களுக்காக என் சக்தியையும் மீறி உழைப்பேன் உழைப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.
பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தி.மு.க. பெயர், கருப்பு சிவப்பு கொடி, உதயசூரியன் சின்னம் ஆகிய ஆறும் தமிழ்நாட்டின் மக்களின் இதயத்திலே சிந்தனையிலே செயலிலே ஆறாக ஓட வேண்டும் என்று ஆத்தூரிலே உறுதி ஏற்போம். அதுவே தமிழ்நாட்டை வளப்படுத்தும் நலப்படுத்தும்." இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திராவிட மாடல் குறித்து முதல்வர் பேசும்போது, அதை வரவேற்கும் விதமா தொண்டர்கள் விசில் அடித்தும், கரவொலி எழுப்பியும் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர்.