மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வகை அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு நில வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திய நிலங்களை வகை மாற்றம் செய்து கிரையப் பத்திரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இன்று வானகரம் - போரூர் பைபாஸ் சர்வீஸ் சாலை அருகே மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் முன்னாள் எம்.பி. டி.கே.ரங்கராஜன் பேசியதன் சுருக்கம்; “நீர்நிலை பாதுகாப்பு என்ற பெயரில் பொதுநல வழக்கு தொடுப்பவர்கள் பாஜக-வினராக உள்ளனர். இத்தகைய வழக்குகளில் என்ன பொதுநலன் உள்ளது என்று நீதிபதிகள் கவனிக்க வேண்டும். 25 வருடங்களுக்கு முன்பு 3 கோடியாக இருந்த தமிழக மக்கள் தொகை தற்போது 7 கோடியை தாண்டியுள்ளது. இதன் காரணமாக நகரம் வளர்கிறது. நகர கட்டமைப்பு முறையாக இல்லாததால் மக்கள் ஆங்காங்கே குடியேறுகிறார்கள். அனைத்து ஆவணங்களையும் வைத்துள்ள மக்களிடம் குடிமனைப் பட்டா மட்டும் இல்லை. வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயர் இடம் பெறும்போது, அந்த வசிப்பிடம் அவருக்கு சொந்தம்தானே?
திமுக ஆட்சிக்கு வர மார்க்சிஸ்ட் கட்சி துணை நின்றது. நீட், ஆளுநர் அத்துமீறல் எதிர்ப்பு, மாநில உரிமை பாதுகாப்பு போன்றவற்றில் திமுக-வை ஆதரிக்கிறோம். இந்த அரசு நீடிக்க வேண்டும். அது தொடர பட்டா கொடுக்க வேண்டும். அரசு மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும். மக்களின் குரலை ஆட்சியாளர்களும், நீதிமன்றங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
கடவுளுக்கு நிகராக, மன்னர்களுக்கு இணையாக நீதிபதிகளை மக்கள் பார்க்கின்றனர். நீதிமன்றத்தின் மாண்புகளை காக்கும் வகையில் நீதிபதிகள் செயல்பட வேண்டும். திராவிடர்களை வெளியேற்றிவிட்ட பிறகு என்ன மாடல் இருக்கும்? மக்கள் இல்லாத மாடல் என்ன மாடல் அது? எனவே, நீண்ட காலம் குடியிருக்கும் மக்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.
அக்கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் பேசுகையில், “சென்னையில் 250 ஏரிகள் வரை இருந்தது. நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டுமென்றால் சென்னை நகரை பெயர்த்து வேறு இடத்திற்குதான் கொண்டு செல்ல வேண்டும். 5 ஆண்டுகள் அறுவடை நடைபெறாத நிலங்களை வகைமாற்றம் செய்து குடியிருப்பு பகுதியாக மாற்ற சட்டம் உள்ளது. ஆடு, மாடு மேயாத சென்னை நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலம் எதற்கு? ஆகவே, பயன்பாட்டை இழந்த நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு வகைமாற்றம் செய்து குடிமனைப்பட்டா வழங்க சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்.
ஏரிகளுக்குள் கட்டப்பட்ட நீதிமன்றங்களில் இருந்து கொண்டு, பயன்பாட்டை இழந்த நிலங்களில் வசிப்போரை, நீர்நிலை என்று கூறி அகற்ற நீதிபதிகள் உத்தரவிடுகின்றனர். சென்னை நகரில் தினசரி குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். தற்போது மக்கள் வசிக்கும் இடங்கள் ஆக்கிரமிப்புகள் என்றால், அந்த இடங்களை ஒதுக்கீடு செய்த அதிகாரிகளைத்தான் நீதிமன்றங்கள் கைது செய்ய வேண்டும். ஆகவே, தற்போதுள்ள நீர்நிலைகளை பாதுகாத்துக் கொண்டு, பயன்பாட்டை இழந்த நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும்” என்று கூறினார்.
மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், “சென்னையில் 50 விழுக்காடு குடும்பங்கள் குடிமனைப்பட்டா இல்லாமல் உள்ளன. இதை சரி செய்ய வேண்டும். குடியிருப்புகளை அகற்றும் நீதிமன்றம், அரசு உத்தரவுகளை எதிர்கொள்ள ஒற்றுமையை பலப்படுத்துவோம்” என்றார்.
இந்த மாநாட்டில், சி.பி.ஐ.எம். பகுதிக்குழு உறுப்பினர் கே.ரமேஷ், கிளைச் செயலாளர் பழனி, மாவட்டச் செயலாளர் வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பீம்ராவ், மாநிலக் குழு உறுப்பினர் பாக்கியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார், மாவட்டக்குழு உறுப்பினர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.