நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், 17ஆம் தேதி அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது இழப்பு திரை உலகைத் தாண்டி பல்வேறு தரப்பினரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. பல்வேறு விதங்களில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திவந்த நடிகர் விவேக், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
பின்னர் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பத்திரிகையாளர்களைச் சந்தித்து அனைவரையும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், தடுப்பூசி செலுத்திய மறுநாளே திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் கரோனா தடுப்பூசி செலுத்திய காரணத்தால்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என பலதரப்பட்டவர்களும் பேசிவந்தனர். இவ்வாறு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்புதான் நடிகர் விவேக் உயிரிழந்ததாக தகவல் பரவிய நிலையில், கரோனா தடுப்பூசிக்கும், விவேக் மரணத்துக்கும் சம்பந்தம் இல்லை என மருத்துவமனை நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் விளக்கம் அளித்தது. இது தொடர்பாக விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “நடிகர் விவேக் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். மேலும், அவருக்கு இதற்கு முன்பு எப்போதாவது மாரடைப்பு ஏற்பட்டதா? கரோனா தடுப்பூசி செலுத்திய நிலையில்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்பது குறித்து மருத்துவ ரீதியாக விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கையைப் பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு வெளியிடவில்லை” என தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் மனு அளித்தார். தற்போது இந்தப் புகார் மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது.