Skip to main content

"ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்?"- உயர் நீதிமன்றக் கிளை கேள்வி! 

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

"What is the problem in granting parole to Ravichandran?" - High Court Branch Question!

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஷ்வரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் எனது மகன் ரவிச்சந்திரன் இருக்கிறார். இந்த வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனடிப்படையில், தமிழக அரசின் அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்த தீர்மானம் தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக தொடர்ந்து காத்திருப்பில் உள்ளது. இந்த நிலையில், ரவிச்சந்திரனுக்கு மூன்று மாத கால விடுப்பு வழங்கக் கோரி மனு அனுப்பிய நிலையில், மத்திய அரசின் செயல் அதிகாரத்துக்கு உட்பட்ட சட்டப்பிரிவின் கீழ் தண்டனை பெற்றுள்ளதால், அவருக்கு சாதாரண விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய இயலாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதாவது இந்த உத்தரவையும் தமிழக அரசு ஏற்கனவே ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகவே, இவற்றைக் கருத்தில் கொண்டு ரவிச்சந்திரனுக்கு இரண்டு மாத கால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். 

 

இந்த வழக்கு இன்று (29/07/2021) நீதிபதிகள் கல்யாண சுந்தரம், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாகப் பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரினார். 

 

அதற்கு நீதிபதிகள், "வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்றொருவருக்குப் பரோல் வழங்கிய நிலையில், ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்?" என கேள்வி எழுப்பினர். அதைத் தொடர்ந்து, இதுகுறித்து அரசிடம் உரிய தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்