தமிழகத்தில் ரூபாய் 31,400 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க இன்று (26/05/2022) சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி என்னென்ன திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
75 கி.மீ. மதுரை- தேனி அகல ரயில் பாதையை காணொளி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கிறார். சென்னை தாம்பரம்- செங்கல்பட்டு இடையேயான மூன்றாவது ரயில் பாதையில் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார். எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பெரும்பாக்கத்தில் ரூபாய் 116 கோடியில் கட்டப்பட்ட 1,152 வீடுகளையும் திறக்கிறார். சென்னை மப்பேட்டில் ரூபாய் 1,200 கோடியில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். சென்னை- பெங்களூரு விரைவுச்சாலை திட்டத்தின் மூன்றாம் கட்ட பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
ஆந்திராவின் சித்தூர் ராமாபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை ரூபாய் 3,472 கோடியில் 106 கி.மீ. சாலை அமைகிறது. எண்ணூர்- செங்கல்பட்டு, திருவள்ளூர்- பெங்களூருக்கு குழாய் மூலம் எரிவாயு எடுத்து செல்லும் திட்டமும் தொடங்கப்படுகிறது. சென்னை துறைமுகம்- மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட பாலத்துக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், ஓசூர்- தருமபுரி, மீன்சுருட்டி- சிதம்பரம் நெடுஞ்சாலைப் பணிகள் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.