
தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன. பல இடங்களில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு மத்திய அரசிடம் நிவாரணம் கோரப்படும் என தமிழ்நாடு முதல்வர் தெரிவித்திருந்தார். அதன்படி, கடந்த 17ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்த திமுக எம்.பி. டி.ஆர். பாலு, '2,079 கோடி வழங்க வேண்டும். அதிலும் 550 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்' என வலியுறுத்தியிருந்தார். மொத்தம் 2,629 கோடி ரூபாய் நிவாரணம் கேட்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை எழிலகத்தில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''வெள்ள சேதங்களை ஆய்வுசெய்ய மத்தியக் குழு நாளை (21.11.2021) தமிழகம் வருகிறது. நவ. 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் ஆய்வு நடைபெறும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மத்திய அரசிடம் நிவாரணம் பெற எவ்வளவு அழுத்தங்களைக் கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தம் கொடுத்து தற்போது புதியதாக இருக்கும் வெள்ளச் சேத விவரங்களையும் சேர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மூலமாக முடிந்த அளவுக்கு அதிக நிவாரணம் பெற நடவடிக்கை எடுப்போம்.
மத்திய ஆய்வு குழுவினர் இரண்டு நாட்கள் ஆய்வு செய்கிறார்கள். இரண்டு நாளில் அனைத்து இடங்களையும் ஆய்வு செய்வது கடினம். எனவே மாவட்ட ஆட்சியர்களிடம் என்ன சொல்லியிருக்கிறோம் என்றால், எந்த இடத்தில் நமக்கு அதிகம் பாதிப்பு இருக்கிறது. வருபவர்கள் மனசும் ஏத்துக்கணும். அதுமாதிரி இருக்கும் இடங்களைத் தயார் பண்ணுங்க. அந்தப் பகுதி விவசாயிகளை முன்னிலைப்படுத்துங்கள். அரசியல்வாதிகளைவிட விவசாயிகளை முன்னிலைப்படுத்தி சேத விவரங்களைத் தெரியப்படுத்துங்கள் என சொல்லியிருக்கிறோம்'' என்றார்.