நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவிடம் முறையிடுமாறு நடிகர் சூர்யா கோரிக்கை வைத்துள்ளார்.
நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து, கடந்த 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து இக்குழுவில், கடந்த 10ஆம் தேதி மருத்துவத்துறைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட்ட 8 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நீட் தேர்வில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் மக்களின் கருத்தையும் இக்குழு கேட்க இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து neetimpact2021@gmail.com என்ற இணைய முகவரியில் கருத்து கூறலாம். வரும் 23ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பிவைக்கலாம் என ஏ.கே. ராஜன் குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''நமது கல்வி உரிமையை காப்போம். அரசுப் பள்ளியில் படித்து பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம்.
ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் பணம் படைத்தோருக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிறது. இருவேறு கல்வி வாய்ப்பு இருக்கிற சூழலில் தகுதியை தீர்மானிக்க ஒரே தேர்வு முறை என்பது சமூகநீதிக்கு எதிரானது.
இந்தியா போன்ற பல மொழி கலாச்சார வேற்றுமை நிறைந்த நாட்டில் கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம். கல்வி, மாநில உரிமை என்ற கொள்கையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 12 ஆண்டுகள் பள்ளிக் கல்வி பயின்ற பிறகு நுழைவுத்தேர்வு மூலமாகவே உயர் கல்விக்குச் செல்ல வேண்டும் என்பது சமூகநீதிக்கு எதிரானது. நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய நீட் தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்த வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து பயணிக்கும் அகரம் ஃபவுண்டேஷன் நீதிபதியிடம் நீட் பாதிப்புகளை பதிவுசெய்துவருகிறது. மாணவர் நலனுக்கும் மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் ஆபத்தானவை. மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்த மாணவர்கள் கனவில் நீட் மூலம் தீ வைக்கப்பட்டது. நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவிடம் தவறாமல் முறையிட வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.
நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் ஆபத்தானவை என இதற்கு முன்பே நீட் தேர்வு தொடர்பான கருத்துக்களை அறிக்கை மூலமாக நடிகர் சூர்யா தெரிவித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.