இந்தியா முழுக்க வரும் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவிருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு பொது வெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபடுதல், ஊர்வலமாக எடுத்துச் செல்லுதலுக்குத் தடைவிதித்துள்ளது. அதேவேளையில் வீட்டில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடவும், வீடுகளில் வழிப்படும் சிலைகளைக் கோயில்களில் வைத்தால் அதனை அறநிலையத்துறை மூலம் எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கட்டாயம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சியினர் தற்போது பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மலைக்கோட்டை முன்பு சுமார் 3 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை மாணிக்க விநாயகர் சன்னதியில் வைத்து தேங்காய், பழம் வைத்து சூடம் ஏற்றி பூஜை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்து மக்கள் கட்சியினர் மற்றும் இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சந்துரு, “சுதந்திரப் போராட்டத்தில் இந்து மக்களுக்கு எழுச்சியை ஊட்ட ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த விநாயகர் ஊர்வலம். தற்போது இந்த விநாயகர் ஊர்வலத்திற்குத் தடை விதிக்கிறார்கள். தடையை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் தடையை மீறி இந்து மக்கள் கட்சி சார்பாகத் தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவோம்” என்று தெரிவித்தார்.