நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக்கின் மறைவிற்கு வந்திருந்த நகைச்சுவை நடிகர் சார்லி, ''விவேக்கால் தாங்கமுடியாத விஷயங்கள் இரண்டே இரண்டு. ஒன்று ஒருவர் முன் ஒருவரை அவமானப்படுத்துவதை விவேக்கால் தாங்க முடியாது. பொங்கி எழுந்துடுவார். இன்னொன்று மற்றவர்களுக்கு கஷ்டம் என்றாலும் தாங்க முடியாது. எங்கள் காமெடியன்களிலேயே அவர்தான் ஹீரோ. அவரது இழப்பு சினிமாவுக்கும் தமிழகத்திற்கும் இழப்பாக இருக்கலாம். ஆனால், எனது குடும்ப நண்பனை நான் இழந்தது தனிப்பட்ட இழப்பு. எதையாவது சொல்லி எதையாவது ஈடுகட்டுவதற்கான இழப்பல்ல. அடிக்கடி நாங்க ரெண்டுபேரும் பாடிக்கொள்ளும் பாட்டு, அவருக்குப் பிடித்த பாடலும் கூட, 'அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே' அதிலும், ''பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா'' அவருக்கு பிடித்த லைன். இன்னைக்கு எங்களை எல்லாம் பதறவைச்சுட்டு போயிட்டாரு. மரம் இருக்கும் வரைக்கும், மண் இருக்கும் வரைக்கும் என் நண்பன் விவேக்கின் பேர் இருக்கும்'' என்றார் உருக்கமாக.