
ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவர் போலீசார் விசாரணைக்குச் சென்று திரும்பிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாணவனின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் நீர்கோலனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி இளைஞர் மணிகண்டன் என்பவர் போலீசார் வாகன சோதனையின் பொழுது நிற்காமல் இருசக்கர வாகனத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு போலீசால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். போலீசார் விசாரணைக்கு சென்று வீடு திரும்பிய மணிகண்டன் கடந்த 5 ஆம் தேதி அதிகாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மணிகண்டன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் வைத்திருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட வாகனம் என்றும், அதை திருடிய நபர் மணிகண்டனிடம் குறைந்த விலைக்கு விற்றதும் தெரியவந்தது.

ஆனால் இந்த சம்பவத்தில் தனது மகன் மீது எந்த தவறும் இல்லாத நிலையில் எங்களது மகனை போலீசார் தாக்கி கொன்றுவிட்டதாக மணிகண்டனின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவன் மணிகண்டன் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.