Skip to main content

“வெள்ளபாதிப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க அருவாமூக்குத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்”-பி.ஆர் பாண்டியன் வலியுறுத்தல்!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

We need to implement plan to protect farmers from floods

 

சிதம்பரம் அருகே மணிக்கொள்ளை உள்ளிட்ட கிராமங்களில் தற்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்  பி.ஆர். பாண்டியன்  பார்வையிட்டுப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

 

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “பேரிடர் மேலாண்மை திட்டத்தில் இடுபொருள் இழப்பீடு ரூ 20 ஆயிரத்தை, ரூ 6030-ஆக  குறைப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை குமரி முதல் சென்னை வரையிலும் வரலாறு காணாத வகையில் பெய்து வருகிறது. இதனால் பெரும்பகுதியான மாவட்டங்களில் சம்பா, தாளடி பயிர்கள் ஒரு மாதத்திற்கு மேல் தண்ணீரில் மூழ்கி அழுகி வருகிறது. மேலும் பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகப் பெரும் துயரத்தில் உள்ளனர்.

 

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறு கணக்கெடுப்பு நடத்தி ஏற்கனவே மத்திய அரசு இடுபொருள் இழப்பீடாகப் பேரிடர் மேலாண்மை திட்டத்தில் ரூபாய் 20 ஆயிரம் அனுமதிக்கப்பட்டு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருவதை ரூபாய் 6030 ஆக குறைந்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து தற்போதைய விலை வாசி உயர்வை கணக்கில்கொண்டு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ25 ஆயிரம் உயர்த்தி இடுபொருள் இழப்பீடாக சம்பா தாளடி பயிர்களுக்கு வழங்கிட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

 

We need to implement plan to protect farmers from floods

 

கடலூர் மாவட்டம் மணிக்கொள்ளையை சுற்றி இருக்கிற 20 கிராமங்கள் பரவனாறு வடிகால் கடல் முகத்துவார பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அருவாமூக்குத்திட்டம் கிடப்பில் உள்ளதால் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படுகிற தண்ணீரும், வெள்ள நீரும் கலந்து இந்த கிராமங்களில் ஆண்டுதோறும் முழுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு மாத காலமாக முழுமையை நீரால் சூழப்பட்டு பயிர்கள் அழிந்ததோடு, குடியிருப்புகளும் நீரால் சூழப்பட்டுள்ளது. மேலும் பரவனாறு கரையை ஒட்டி இருக்கிற பகுதிகளில் சட்டவிரோதமாக இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டு வெள்ளநீர் தடை ஏற்பட்டுள்ளதால் மிகப்பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.

 

எனவே உடனடியாக அவசரகால நடவடிக்கை எடுத்து நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்களிப்போடு  அருவாமூக்கு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டும். சட்டவிரோதமாக பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இறால் பண்ணைகளை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 2020-21 ஆம் ஆண்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு கடலூர் மாவட்டத்தில் 37 கிராமங்களில் இழப்பீடு அனுமதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் 182 கிராமங்களில் ஜீரோ என கணக்கிடப்பட்டு இழப்பீடு வழங்க மறுத்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் இழப்பீடு பெற்று தரவேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. எனவே உடன் நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்” என்றார். இவருடன் தமிழக அனைத்து விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்