![we have two ministers but The plans not working properly KN Nehru](http://image.nakkheeran.in/cdn/farfuture/aYP5qVZdnjNXlfnwLaw0e4l9exVGQmU_cS87LE4t7Gg/1614000209/sites/default/files/inline-images/th_639.jpg)
திருச்சியில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்திய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்குப் பேட்டி அளித்த கே.என்.நேரு, “திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதன் பேரில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக் குழுக் கடன் தள்ளுபடி, மாணவர்கள் கல்விக் கடன் தள்ளுபடி ஆகியவற்றை செய்துவருகிறார். திருச்சி மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும், எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் இந்நாள்வரை முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் முறையாகச் செயல்படாமல் உள்ளது.
மத்திய அரசுக்கு அடிபணிந்து விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திட்டம், நீட் தேர்வு ஆகியவற்றை அதிமுக அரசு செயல்படுத்திவருகிறது. காவிரி குண்டாறு திட்டத்தால் சேலம் மாவட்டம் மட்டுமே வளம்பெறும். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு எவ்விதப் பயனுமில்லை. மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். கடந்த காலங்களில் நெய்வேலியில் 650 பேர் வேலைக்கு எடுக்கப்பட்டு அதில் 8 பேர் மட்டும்தான் தமிழர்களாக உள்ளனர். அதேபோல் திருச்சி பொன்மலை ஒர்க்ஷாப்பில் அதிகப்படியான வெளிமாநில ஆட்களைப் பணியில் அமர்த்தி உள்ளனர். வருகிற மே மாதம் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இலவச வீடு பட்டா, சுகாதாரமான குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்” எனத் தெரிவித்தார்.
இதேபோல், திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய, மாநில அரசைக் கண்டித்தும், விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.ஏல்.ஏ. முன்னிலையில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜ், கவிஞர் சல்மா, செந்தில், மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் மு.மதிவாணன், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றியப் பெருந்தலைவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.