Skip to main content

இருநூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வேண்டும் -சாயல்குடியில் அனைத்து சமுதாய தலைவர்கள் தீர்மானம்..!!!!

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

குடிநீர் எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையை கண்டித்து சாயல்குடியில் கடையடைப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெறும் என அனைத்து சமுதாய தலைவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக தீர்மானம் இயற்றியுள்ளனர்.

 

water

 

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட தாலுகாவை உள்ளடக்கிய இருநூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜாபுரம் கிராம கிணத்திலிருந்து டிராக்டர்கள் மூலம் குடிநீர் எடுத்து மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் மற்ற கிராமங்களுக்கு குடிநீர் எடுத்து செல்வதால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தற்காலிக தடை வாங்கியுள்ளனர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக டிராக்டர் மூலம் விற்பனை செய்து வந்த குடிநீர் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கடலாடி தாலுகாவில் பெரும்பாலான இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தால் உவர்ப்பு நீர் மட்டுமே கிடைக்கிறது. இப்பகுதியில் கன்னிராஜபுரம் கிராமத்தை தவிர வேறெங்கும் சுவையான குடிநீர் கிடைப்பதில்லை.

 

 

இந்நிலையில் தண்ணீரின்றி தவிக்கும் கிராமங்களின் முக்கிய நிர்வாகிகள் அனைத்து சமூதாய தலைவர்கள், மற்றும் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை சாயல்குடி அரண்மனையில்  நடைபெற்றது. இதுகுறித்து சாயல்குடி ஜமீன்தார் ஏ, சிவஞானபாண்டியன் கூறுகையில், "இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சுமூக தீர்வுகாண வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்ப்படாவிடில் வருகின்ற 15-5-2019 அன்று சாயல்குடியில் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்." இதனால் இப்பகுதியில் மிகுந்த பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்