திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் கமலாலயக் குளத்தின் இடிந்து விழுந்த பகுதிகளை ஆய்வு செய்த தேசிய தொழில்நுட்ப கழக குழுவினர் 'இன்னும் ஒரு மாதத்தில் ஆய்வு செய்து முழு அறிக்கை சமர்ப்பிப்போம்' எனக் கூறியுள்ளனர்.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. விவசாயப் பணிகளே துவங்க முடியாதபடி தண்ணீர் கடல்போல வடியாமல் கட்டியிருப்பது ஒருபுறம், மறுபுறம் முன்கோப்பில் நடவு செய்யப்பட்ட நிலங்கள் தொடர் மழையில் மூழ்கி விவசாயிகளை பாழ்படுத்தி வருகிறது. இந்தநிலை கடந்த மாதம் பெய்த கனமழையினால் உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குச் சொந்தமான கமலாலயக்குளத்தின் தெற்கு கரை பகுதி வலுவிழந்து சரிந்தது. உடனடியாக தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் இதனை நேரில் பார்வையிட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குளத்தின் கரையைச் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க உத்தரவு கலந்த ஆலோசனை வழங்கினார்.
அவரை தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக இன்று தேசிய தொழில்நுட்ப கழகத்தின் பேராசிரியர் முத்துக்குமார் மற்றும் பேராசிரியர் சரவணன் உள்ளிட்ட இரண்டு பேர் கொண்ட குழுவினர் திருவாரூர் தியாகராஜர் கோவிலின் குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கமலாலய குளத்தில் படகில் சென்று சரிந்து விழுந்த குளக்கரையை ஆய்வு செய்தவர்கள் குளத்தின் கரையை மீண்டும் வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நீண்ட நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் குழுவின் தலைவர் முத்துக்குமார், "குளத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்பு ஒரு மாதத்திற்குள் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மேலும் கனமழை பெய்தால் தெற்கு பகுதியில் மேலும் சில பகுதிகளும் இடிந்து விழுவதற்கு வாய்ப்புள்ளது. இதனை முன்கூட்டியே கருத்தில்கொண்டு இந்த பகுதியில் போக்குவரத்தைத் தடை செய்து பாதுகாப்பு வழிமுறைகளைச் சிறப்பாக மேற்கொண்டிருக்கின்றனர். முதற்கட்ட ஆய்வின் முடிவில் ஒட்டுமொத்தமாகக் குளத்தின் அனைத்து கரைகளையும் பலப்படுத்தினால் பாதுகாப்பாக இருக்கும்" என்றார்.