Skip to main content

கலவரமும் பொய்யும் இந்துத்வா ஆயுதங்கள்! -பாசிச எதிர்ப்பு நாள் கண்டனம்!

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
si


 
இன்று விருதுநகர் மாவட்ட தமுமுக தலைமையில்,  ‘டிசம்பர் 6 – பாசிச எதிர்ப்பு நாள்’ என்ற பெயரில், கருஞ்சட்டை அணிந்து,  சிவகாசியில் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தினார்கள். 

 

பாபரி மஸ்திதை இடித்த பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம்!
மஸ்திதை இடித்த காவிகளே!
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைத்த பாவிகளே!
தேச ஒற்றுமையைக் குலைக்காதீர்!

நாங்கள் பிறந்து வளர்ந்த பூமியிலே, 
மாமன் – மச்சான் உறவுகளோடு, 
அனைத்து மக்களின் துணையோடு,
ஜனநாயகம் காத்திட, நல்லிணக்கம் வளர்த்திட,
மனிதநேயம் பேணிட உரிமைக்குரல் எழுப்புகிறோம்!

ஆறாது.. ஆறாது.. டிசம்பர் ஆறு ஆறாது!
தீராது.. தீராது.. நீதியின் தாகம் தீராது!

-ஆர்ப்பாட்டத்தின்போது எழுப்பப்பட்ட கோஷங்கள் இவை!

ஆர்ப்பாட்ட மேடையில் மைக் பிடித்த தமுமுக பேச்சாளர் காதர் பாட்ஷா –

“இந்தியா – பாகிஸ்தான் கலவரத்தின்போது ஆயிரக்கணக்கானோர் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டனர். நேருவால் அடக்க முடியவில்லை. சர்தார் வல்லபபாய் படேலால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தநிலையில் மகாத்மா காந்தி,  ‘கலவரம் நிற்கும் வரை, நான் சாகும் வரையிலும் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்தால்தான் நான் உண்ணாவிரதத்தை முடிப்பேன்.’ என்றார். காந்தியின் இந்த அறிவிப்பைக் கேட்ட சங்பரிவார் கும்பலுக்கு அப்படி ஒரு வேகம் வந்தது. நாம் ஒற்றுமையைக் குலைத்து வேட்டையாடிக் கொண்டிருக்கிறோம். காந்தியோ இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒற்றுமைப்படுத்தப் பார்க்கிறார். இவர் இருக்கும் வரையிலும் நம் திட்டம் நிறைவேறாது என்று முடிவெடுத்தனர்.

 

a

 

நமக்கெல்லாம்  காந்தியை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தியாகியாகத்தான் தெரியும். ஆனால், அவர் ஒரு இந்து ஆன்மிகவாதி. மிகச்சிறந்த ஞானி. ஒரு சாமியாரைப் போன்றவர். இந்து மதத்தின் கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர். சிறந்த ஆன்மிகவாதியான இந்திய தேசத்தின் தந்தையை, இந்த இந்துத்வா தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றார்கள். ஏன் தெரியுமா? காந்தி ஒற்றுமை ஒற்றுமை என்று பேசிக்கொண்டிருப்பார். நம் திட்டமோ கலவரம் உண்டாக்க வேண்டும் என்பது. அதற்கு இவர் சரிவர மாட்டார் என்று அவர்கள் திட்டமிட்டதே! பின்னாளில் இவர்கள் கலவரத்துக்காகக் கையிலெடுத்த விஷயம்தான் பாபர் மசூதி. இந்துக்களையும் முஸ்லிம்களையும் துண்டாட வேண்டும். கலவரத்தை உண்டாக்கி, அதன்மூலம் ஓட்டு வேட்டை நடத்த வேண்டும் என்பதுதான் சங்பரிவார்களின் திட்டம். அப்படி கலவரம் நடத்தியதால்தான் இன்றைக்கு நரேந்திரமோடி மத்தியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். உ.பி.யில் கலவரம் நடத்தினர்; பொய்களைப் பரப்பினர்; ஆட்சிக்கும் வந்தனர். ஆட்சியைப் பிடிப்பதற்கான இவர்களின் ஆயுதங்களில் ஒன்று கலவரம்; இன்னொன்று பொய்.” என்று காரசாரமாகப் பேசினார். 

 

பலத்த போலீஸ் பாதுகாப்புடன், இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து; ஒருவர் கைது!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
sattur Fireworks Factory incident One person involved

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் நேற்று (17.02.2024) வழக்கம் போல பட்டாசு ஆலையில் பணிகள் நடந்து வந்தன. இத்தகைய சூழலில் மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த சமயம் சுமார் 30 பேர் அங்கு பணியாற்றியதாகக் கூறப்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 10 லட்சம் என்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பிரதமர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து பட்டாசு ஆலையின் போர்மேன் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள விக்னேஷ், ஜெயபால் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

Next Story

‘3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
'Chance of rain in 3 districts' - Meteorological Department information

வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழையும், தூத்துக்குடியின் மாநகர பகுதிகளில் சாரல் மழையும் பெய்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் பெய்யும் பருவம் தவறிய மழையால் தூத்துக்குடியில் உப்பள தொழில்களை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.