உள்நாட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஐ.ஏ.எஸ். பணியே உயர்ந்தது. ஐ.ஏ.எஸ். என்பது, அரசு நிர்வாகத்தை தலைமையேற்று நடத்தும் பணியாகும். ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியால், சமூகத்திற்கு நிறைய சேவைகளைச் செய்ய முடியும்.
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி எப்படி இருக்க வேண்டுமென்றால் – தனது கண்களையும், காதுகளையும் கூர்மையாக வைத்துக்கொண்டு, நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து, சிறப்பான முடிவுகளை எடுப்பதற்கு அரசுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும்.
ஐ.ஏ.எஸ். பணிக்கான தகுதிகள் என்னவென்றால் – நேர்மறை எண்ணம், தலைமைத்துவ பண்பு, ஆளுமைத்திறன், தைரியம், உறுதியான மனப்பாங்கு, தன்னம்பிக்கை, ஒவ்வொரு நெருக்கடியான சூழலிலும் அமைதியைக் கடைப்பிடித்தல், நல்ல அறிவுத்திறன், சிறப்பான பொதுஅறிவு, நல்ல தகவல்தொடர்பு திறன் எனப் பட்டியலிடலாம்.
‘எந்த மாவட்ட கலெக்டரும் சொல்லாததை, செய்யாததை, சின்னஞ்சிறு பிள்ளைகளும்கூட, கலெக்டர் பெயர் ‘மேகநாத்’ என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறார், நமது விருதுநகர் மாவட்ட கலெக்டர்.’ என்று ‘ட்வீட்’ செய்துள்ளார், மணிகண்டன். ‘எல்லா மாவட்டத்துக்கும் உங்களை மாதிரி ஆட்சியர் இருந்தால், அரசுப் பள்ளி கண்டிப்பாக முன்னேறிவிடும். கொடுத்து வச்ச விருதுநகர் மாவட்டம்.’ என்கிறார் சசிகுமார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பாராட்டப்படுவது ஏன்?
ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக செயல்பட்டுவருகிறார் மேகநாத ரெட்டி ஐ.ஏ.எஸ். பொதுமக்களின் குறைகளை அறிந்து பதிலளிப்பதுடன், பிரச்சனைகளுக்குத் தீர்வும் காண்கிறார்.
தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை குறித்த தகவலை தொடர்ந்து ட்வீட் செய்துவருகிறார் மேகநாத ரெட்டி. பதிலுக்கு மாணவர்களும் நன்றி தெரிவித்துவருகின்றனர். அதற்கு மேக்நாத ரெட்டி ‘தம்பிகளா நன்றியெல்லாம் போதும்.. சோசியல் மீடியாவை மூடிவிட்டு, சோசியல் சயின்ஸ் புத்தகத்தைக் கையில் எடுத்துப் படியுங்கள். நாளை பள்ளியில் தேர்வு நடக்கிறது.’ என்று மாணவர்களுக்கு ஒரு அண்ணனாக இருந்து அன்புடன் அறிவுறுத்தியுள்ளார். மக்களிடம் காட்டிவரும் இந்த நெருக்கம்தான், அவரைப் பாராட்டு மழையில் நனைய வைத்திருக்கிறது.
அதேநேரத்தில் ‘கடையைத் திறந்தோமா? காலேஜ் இல்லைன்னு சொன்னோமான்னு இருங்க தெய்வமே! மழையில் சாப்பிட்டு தூங்குபவனைப் படிக்கச் சொல்லி கொடுமைப்படுத்த வேண்டாம், தெய்வமே!’ என்று உரிமையுடன் ரீ ட்வீட்டில் கலெக்டரையே கலாய்க்கும் ஹரிஹரன் போன்ற பொதுஜனமும் இல்லாமல் இல்லை.
பழனி ராஜ்குமார் போன்றவர்களோ ‘மக்களுக்கு அறிவுரை சொல்வதெல்லாம் சரிதான்! பல வருடங்களாக வைப்பாறு தூர்வாராமல் கிடக்கிறதே? கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறதே? இதற்கெல்லாம் என்ன உத்தரவு பிறப்பித்துள்ளீர்கள்? அரசாங்கமோ, அமைச்சரோ செயல்படுவதற்கான உத்தரவு எதுவும் பிறப்பித்ததுபோல் தெரியவில்லையே?’ என்று மாவட்டத்தின் தேவைகளைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பவும் செய்கின்றனர்.
ஹரீஸ் என்பவர் ‘சமூக வலைத்தளங்களில், ஒரு மாவட்ட ஆட்சியரால் மக்களை இந்த அளவுக்கு நெருங்க முடிகிறதென்றால், தற்போதைய அரசாங்கம், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிகாரியின் கைகளைக் கட்டிப்போடாமல், சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திருப்பதுதான்!’ எனப் பதிவிட்டுள்ளார்.
மக்கள் கேள்வி கேட்பதும், மாவட்ட ஆட்சியர் பதிலளித்து தீர்வு காண்பதும், அரசாங்கம் இவற்றுக்கு இசைவதும் ஆரோக்கியமான செயல்பாடுகள் அல்லவா!