இன்று தேசம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் விதத்தில், இவ்விழாவைக் கொண்டாட, தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனால், பொது இடங்களில் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கும், சிலைகளை வைத்து வழிபடுவதற்கும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் அனுமதி இல்லை. அதேநேரத்தில், அவரவர் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கோ, அருகிலுள்ள நீர்நிலைகளில், தனிநபராகச் சென்று சிலையைக் கரைப்பதற்கோ தடையில்லை.
உயர்நீதிமன்றமும்கூட, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், மதுரை மாநகராட்சி பூங்கா ஒன்றில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு திருநீறு வழங்கி, காணிக்கையும் பெற்றார்கள் சிறுவர்கள் சிலர். மிகச்சிறு அளவிலான விநாயகர் சிலையை, திறந்த அட்டைப்பெட்டியில் வைத்து, நான்கு பக்கமும் கம்பைப் பிடித்தவாறு, ஒவ்வொரு இடமாகச் சுமந்து சென்றனர். பூங்காவில் பாதுகாப்புக்காக நின்ற போலீசாருக்கும் சிறுவர்கள் திருநீறு வழங்க, ஷூவைக் கழற்றி வைத்துவிட்டு, பிள்ளையார் சிலையை வணங்கி, நெற்றியில் பூசிக்கொண்டனர்.
அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டு, விநாயகர் சதுர்த்தியை சிறுவர்கள் கொண்டாடிய வேளையில், 9-ஆம் வகுப்பு மாணவனான அசோக்குமாரிடம் ‘காணிக்கையெல்லாம் வாங்குகின்றீர்களே?’ என்று பேச்சு கொடுத்தோம். “பிள்ளையாரை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். முக்குல இருக்கிற பிள்ளையாரை கும்பிட்டுட்டுத்தான் ஸ்கூலுக்கே போவேன். காலைல இருந்து நாங்க அஞ்சு பேரும் நடையா நடக்கோம். காணிக்கையை பிரிச்சு எங்க செலவுக்கு வச்சுக்குவோம்.” என்று கள்ளம்கபடம் இல்லாமல் சொன்னான்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக முடியும் என்ற சட்டத்திற்கும், உழைப்புக்கேற்ற கூலி என்பது தனிமனிதனின் உரிமை என்பதற்கும், அச்சிறுவர்கள் செயல் வடிவம் தந்தது, பளிச்சென்று தெரிந்தது. அதற்காக, அவர்களை குழந்தைத் தொழிலாளர்கள் என்றெல்லாம் கொச்சைப்படுத்திவிட முடியாது. இது அவர்களின் கொண்டாட்டம்.. அவ்வளவுதான்!
‘என்ன சார்? இந்தச் சிறுவர்களின் பக்தியை எப்படி பார்க்கின்றீர்கள்?’ என்று திருநீறு பூசிய போலீஸ்காரரிடம் கேட்டோம். தன்னுடைய பெயர் அடையாளத்தைக் காட்டிக்கொள்ள விரும்பாத அவர் “எனக்கு பிள்ளையாரையும் பிடிக்கும்; அல்லா, ஏசு, புத்தர்ன்னு எல்லா சாமியவும் பிடிக்கும். பாண்டிமுனியவும் பிடிக்கும். நான் போட்ருக்க காக்கிச்சட்டையும் எனக்கு சாமிதான். தினமும் தொட்டுக் கும்பிட்டுத்தான் யூனிபார்மை போடுவேன். எதுக்குங்க யாரையும் வெறுக்கணும்? என்னை ஒருத்தன் வெறுத்தாலும் அவனை நான் விரும்புவேன். ஏன்னா.. எங்களப் பொறுத்தமட்டிலும் ஒவ்வொருத்தரும் பப்ளிக். அவங்கள பாதுகாக்கிறதுதான் எங்க வேலையே. எல்லாரும் எல்லாரையும் விரும்புற காலம் ஒண்ணு இருந்துச்சு. அது திரும்பவும் வரும்.” என்றார் நம்பிக்கையுடன்.
மதச்சார்பற்ற நாடு என்பதும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதும், இந்திய தேசத்தின் பலம்!