தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 'எல்லாருக்கும் எல்லாமும்' கிடைக்க வேண்டும் என்பது தமிழக முதல்வரின் எண்ணமாக உள்ளது. அப்படி ஒரு அரசுப் பள்ளிகள் புதுக்கோட்டை மாவட்டம் மாங்குடியிலும், பச்சலூரிலும் உள்ளன. இரு பள்ளிகளையும் ஹைடெக்காக மாற்றி தமிழகத்தின் முதன்மை முன்மாதிரி பள்ளிகளாக மாற்றியவர் தலைமை ஆசிரியர் ஜோதிமணி.
இந்த நிலையில் தான், கடந்த வாரம் வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதனிடம் அப்பள்ளி மாணவி சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் ஒன்று 'ஸ்மார்ட் வகுப்பறை' தங்களுக்கு தேவையான கட்டமைப்பை மாணவர்களே கேட்டதைப் பார்த்து நெகிழ்ந்த அமைச்சர் மாணவியிடம் அந்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டவர், அதே மேடையில் பேசும் போது, ”மாணவியின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் அதில் முதல் கோரிக்கையான ஸ்மார் கிளாஸ் கோரிக்கை. இதனை நிறைவேற்ற ரூ.35 ஆயிரம் பணத்தை மாணவியிடமே வழங்குகிறேன். இந்த தொகையை நமக்கு நாமே திட்டத்தில் செலுத்தி அரசு பங்களிப்பாக மேலும் 2 மடங்கு தொகையை பெற்று ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கலாம் என்றவர் இதே போல அனைத்து பள்ளிகளும் ஹைடெக்காக மாறவேண்டும்” என்றார்.
ஆண்டு விழா முடிந்ததும் புள்ளாச்சி குடியிருப்பு மக்கள் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கல்விப்பயணமாக சென்று பார்த்ததும், இதே போன்ற பள்ளியை எங்கள் பள்ளியிலும் உருவாக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து நிச்சயம் உதவுவதாக கூறியதோடு நவீன வகுப்பறைகள் அமைக்க பச்சலூர் பள்ளி ஆசிரியர்களின் பங்காக ரூ.35 ஆயிரம் வழங்கி மேலும் நெகிழச் செய்தார். அடுத்து பெற்றோர்கள், தன்னார்வலர்களின உதவியோடு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புள்ளாச்சிகுடியிருப்பு பள்ளி கட்டமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது.
இதைப் பார்த்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி ஆலோசனைப்படி திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன் பச்சலூர் பள்ளிக்கு சென்று பார்த்ததோடு இதே போல பள்ளியை மாற்றியமைக்க ஆர்வமுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மேலாண்மைக் குழு, ஆகியோரின் கருத்தறிய முதல் ஆலோசனைக் கூட்டம் கீரமங்கலத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் "ஒரு முறை எங்க பள்ளிக்கு வந்து பாருங்க. முதல்வரை அழைக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்" என்ற தலைப்பில் உள்ள பச்சலூர் பள்ளி பற்றி நக்கீரன் வெளியிட்ட வீடியோ காட்சிப்படுத்தப்பட்டது.
கூட்டத்தில் கீரமங்கலம் மேற்கு, கிழக்கு, பனங்குளம் கிழக்கு, செரியலூர், சேந்தன்குடி, புதுக்கோட்டைவிடுதி ஆகிய பள்ளியிலிருந்து கலந்து கொண்டனர். பெற்றோர்கள், ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு பச்சலூர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி பதில் கூறினார். மன நிறைவடைந்த ஆசிரியர்களும் பெற்றோர்களும் கோடை விடுமுறையிலேயே அதற்கான பணிகளை தொடங்குவதாக உற்சாகமாக புறப்பட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரூராட்சி தலைவர் சிவக்குமார், கீரமங்கலத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியாக மாற்றியமைக்க இருக்கிறோம் என்றார். உள்ளாட்சிப் பிரதிநிகளும் கலந்து கொண்டனர்.
புள்ளாச்சி குடியிருப்பில் அமைச்சர் போட்ட ஸா்மார்ட் கிளாஸ் என்ற விதை பல்வேறு கிராம பள்ளிகளிலும் முளைக்கத் தொடங்கியுள்ளது என்கின்றனர்.