Skip to main content

கொத்தமங்கலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேன் வாங்கி கொடுத்து அசத்திய கிராம மக்கள்

Published on 20/02/2018 | Edited on 20/02/2018
 school students

  

 கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி கிராம மக்கள் அரசு பள்ளி மாணவர்கள் சென்று வர கிராம மக்கள், இளைஞர்கள் வேன் வாங்கி பள்ளிக்கு வழங்கியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.

 

அரசு தொடக்கப்பள்ளி :
    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி கிராமத்தில் 1973 ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்த 3 பேர் மருத்துவர்களாகவும், பலர் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பல துறை அதிகாரிகள், தனியார் நிறுவன ஊழியர்களாக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ள நிலையில் பள்ளிக்கு அரசு ஆசிரியர்கள் 4 பேருடன் கூடுதலாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் சிறப்பு ஆசிரியர்கள், 5 கனிணி, போன்ற வசதிகளும் உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் படிப்பு முட்டுமின்றி அறிவியல் ஆய்வுகள், விளையாட்டு போட்டிகளிலும் மாநில அளவில் சாதித்து வருகின்றனர்.

 

பள்ளிக்கு வேன் :  
    இந்த நிலையில் சிதம்பரவிடுதி பகுதியில் இருந்து சுமார் 50 மாணவ, மாணவிகள் பல ஊர்களிலும் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் வேன்கள் மூலம் சென்று வருகின்றனர். அதனால் அரசு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரவும் அரசு பள்ளியை தரம் உயர்த்தவும் திட்டமிட்ட முன்னால் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம மக்கள் இணைந்து பள்ளிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதுடன் தற்போது தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் போல அரசு பள்ளி மாணவ, மாணவிகளும்  பள்ளிக்கும், வீட்டுக்கு சென்று வர கிராம மக்கள், முன்னால் மாணவர்கள், வெளிநாடு வாழ் இளைஞர்கள் இணைந்து வேன் வாங்கி கொடுத்துள்ளனர்.

 

    இந்த நிலையில் பள்ளியில் நடந்த விழாவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் குணசேகரனிடம் பொதுமக்கள் வேன் சாவியை வழங்கினார்கள். அதிகாரி பள்ளி தலைமை ஆசிரியர் சந்திராவிடம் வேன் சாவியை வழங்கினார். 

 

சைக்கிள்கள் வழங்கினார்கள் :
    வேன் வழங்கியது குறித்து முன்னால் மாணவர்கள் துரைராசு, சுரேஷ் ஆகியோர் கூறும் போது.. இந்த பள்ளி 1973 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளி வளர்ச்சிக்காக முன்னால் மாணவர்கள், கிராம மக்கள் இணைந்து பல்வேறு குழுக்கள் அமைத்து கண்காணித்து வந்தோம். அப்போது தான் மாணவர்களின் பெற்றோர்கள் ஆங்கில மோகத்தால் தான் தனியார் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகிறார்கள் என்பது தெரிய வந்தது. அதனால் 5 கணினிகள் வாங்கி வகுப்பறையில் வைத்தோம். தொடர்ந்து கணினி க்கு சிறப்பு ஆசிரியர், ஆங்கிலம் கற்பிக்க தனி ஆசிரியர் என்று 3 ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமித்து வகுப்புகள் நடத்தப்படுகிறது.

 

    அதன் பிறகு பலரும் இப்பகுதியில் இருந்து தனியார் பள்ளிக்கு வேனில் ஏறிச் செல்வதை ஏக்கத்துடன் அரசு பள்ளி மாணவர்கள் பார்த்து கொண்டே வந்தார்கள். அதனால் அவர்களின் ஏக்கத்தை போக்கவும் அரசு பள்ளிக்கு மாணவர்களை கொண்டு வரவும் பலருடை உதவியுடன் பள்ளிக்கு வேன் வாங்கி வழங்கினோம். ஓவ்வொரு நாளும் 3 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளையும் இந்த வேனில் ஏற்றி வந்து பள்ளியில் விடுவதும், மாலை வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் திட்டமிடப்பட்டு அதற்கென தனி ஓட்டுநர் நியமிக்கப்பட்டு அவருக்காண சம்பளம், எரிபொருளை கிராம மக்களே வழங்க திட்டமிட்டுள்ளோம். மேலும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதாவது கடந்த ஒராண்டில் பாடங்களில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், வருகை பதிவு, அந்த மாணவர்களின் பெற்றோர் ஒவ்வொரு பெற்றோர் ஆசிரியர் கழக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறாரா என்பதை ஆய்வு செய்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த ஆண்டு ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை 19 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி உள்ளோம் என்றனர்.

 

ஆசிரியர்கள் :
    இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரா மற்றும் ஆசிரியர் அருண் ஆகியோர் கூறும் போது.. மாணவர்கள் மீது பெற்றோர்கள் இளைஞர்கள், கல்விப்புரவலர்கள், மிகுந்த அக்கரை செலுத்துவதால் அனைத்து உதவிகளையும் உபகரணங்களையும் அவர்களே செய்து கொடுக்கிறார்கள். அதனால் எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் மேல் படிப்புகளில் சாதித்து வருகின்றனர். மேலும் விளையாட்டிலும் தொடர்ந்து சாதிக்கிறார்கள். தற்போது இலவச சைக்கிள், வேன் வழங்கி இருப்பது மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தும். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள் டைரி எழுதப்படுகிறது. பெற்றோர்களின் ஊக்கம் அடுத்த ஆண்டுகளில் மேலும் நிறைய மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆவலாக உள்ளனர் என்றனர். 

 

    அரசு பள்ளியை தரம் உயர்த்த அரசு உதவியை மட்டும் எதிர்பார்த்து காத்திருக்காமல் கிராம மக்களே தனியார் பள்ளிக்கு இணையாக செயல்படுத்தி வருவது பாராட்டத்தக்கது என்றார் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் குணசேகரன்.

 

- பகத்சிங்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.